பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜா : தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவராக பூச்சிமுருகனும், பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவராக துறைமுகம் காஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் வகுத்துதந்த சமூகநீதிப் பாதையில் நடைபோடும் இந்த அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினரின் முன்னேற்றத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.
இந்த சமூக மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, இவர்களது ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும் பல்வேறு நலத்திட்டங்களை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார மேம்பாட்டுக்கழகம், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த தனிநபர் மற்றும் குழுக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளும் பொருட்டு, பல்வேறு கடனுதவித் திட்டங்களை செயல்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ஓர் நிறுவனம் ஆகும்.
இந்த கழகத்தின் செயல்பாடுகளை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில், அதன் தலைவராக துறைமுகம் காஜா என்கிற காஜா முகைதீனை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, தமிழக அரசு பிறப்பித்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், “ அனைவருக்கும் வீட்டுவசதி என்ற குறிக்கோளை அடையும் வகையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும் வாங்கத்தகுந்த விலையில் வீடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர்களுக்காக பல்வேறு திட்டங்கள் வாயிலாக, லட்சக்கணக்கான மக்கள் வீட்டு உரிமையாளர்களாக வேண்டும் என்ற அவர்களுடைய கனவை நனவாக்கிய பெருமைக்குரியது.
அத்தகைய சிறப்புமிக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பூச்சி எஸ். முருகனை நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பூச்சி எஸ் முருகன் ஏற்கனவே திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினர், விளையாட்டு மேம்பாட்டுக்குழு உறுப்பினர், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை திறம்பட வகித்தவர்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

