நோய் நொடியுடன் உணவின்றி தவிக்கும் மீனவர்கள்... இலங்கையிலிருந்து கேட்கும் தமிழர்களின் அழுகுரல்..
இலங்கையில் விடுதலையாகிய 31 தமிழக மீனவர்கள், இரண்டு வாரங்களை கடந்தும் தாயகம் திரும்ப வழியின்றி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

நாகப்பட்டினம்: எல்லை தாண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 31 நாகப்பட்டினம் மீனவர்கள், இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பின்னரும், இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
விடுதலைக்குப் பிறகும் சரியான அடிப்படை வசதிகள் இன்றி, இலங்கையில் தங்கி அவதிப்பட்டு வருவதாகவும், இந்திய தூதரகம் தங்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டி, மீனவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து உருக்கமான வீடியோ பதிவுகளை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளது நாகை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடிக்கச் சென்றவர்கள் கைது
நாகை மாவட்டம் நம்பியர்நகர், அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்கள் மூன்று வெவ்வேறு விசைப்படகுகளில் கடந்த அக்டோபர் 30, 31 மற்றும் நவம்பர் 3 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
பாரிக்கு சொந்தமான விசைப்படகில் நம்பியர்நகரைச் சேர்ந்த பாரி, பாண்டியன், உதயகுமார், ஆகாஷ், சுபாஷ், மணிமாறன், விக்கி, முருகவேல் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சேத்தான் (மேற்கு வங்கம்), ஹரன், ஜியோ (கேரளம்) உட்பட 11 பேரும்,
இதேபோன்று ராஜாவுக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ராஜா, கலியபெருமாள் மகன் ராஜா, செல்வமணி, ரவி, கணேசன், டாட்டா நகரைச் சேர்ந்த கார்த்திக், நம்பியார் நகரைச் சேர்ந்த பாலவடிவேல், வெற்றிவேல், சவுந்தரராஜன் மற்றும் சாமந்தான்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தவேல் உட்பட 10 பேர்.
ஆனந்தகுமாருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தகுமார், விஜயகுமார், தமிழ்ச்செல்வன், இளங்கோவன், கணேசன், சபரிநாதன், வேளாங்கண்ணியைச் சேர்ந்த சரவணன், முருகானந்தம், பாலகிருஷ்ணன், மணிகண்டன் மற்றும் மயிலாடுதுறை சீர்காழியைச் சேர்ந்த வேல்முருகன் உட்பட 10 பேர் என இவர்கள் மொத்தம் 31 பேரும் கோடியக்கரைக்குத் தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 3 விசைப்படகுகளுடன் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற விடுதலைக்குப் பின்னரும் சிக்கல்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் தொடர்பான வழக்கு பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த நவம்பர் 17-ம் தேதி 31 மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என்று அவர்களது குடும்பத்தினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால், இரண்டு வாரங்கள் கடந்த பின்னரும், அவர்கள் இதுவரை இந்தியா அழைத்து வரப்படவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும், அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
வீடியோ வெளியிட்டு உருக்கமான கோரிக்கை
இந்தச் சூழ்நிலையில், விடுதலையான மீனவர்கள் இலங்கையில் இருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை எடுத்து, நாகையில் உள்ள தங்களது உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவில், "நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும், நாங்கள் இரண்டு வாரங்களுக்கு மேலாக இந்திய தூதரகத்திற்கு சொந்தமான இடத்தில் தங்கியுள்ளோம். சிறையில் இருந்ததை விட அதிக நாட்கள் இங்கு கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். எங்களை தாயகம் அழைத்துச் செல்ல இந்திய தூதரகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களுடன் உள்ள பலருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சரியான உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தவித்து வருகிறோம். எங்களை உடனடியாக மீட்டுச் செல்ல மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சோகத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
மீனவர்கள் அனுப்பிய இந்த வீடியோ பதிவுகளைப் பார்த்த அவர்களின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். "இலங்கை அரசால் கைது செய்யப்பட்டவர்கள் ஒரு வாரத்துக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று நம்பினோம். ஆனால், விடுதலையாகி இரண்டு வாரங்கள் ஆகியும் அவர்கள் வராதது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் அவதிப்படும் எங்கள் சொந்தங்களை உடனடியாக மீட்டு தாயகம் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் விளக்கம்
இதுகுறித்து நாகை மாவட்ட மீன்வளத் துறையினர் அளித்த தகவலில், "மீனவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர, மாவட்ட ஆட்சியர் வாயிலாக தமிழக அரசுக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் புயல் பாதிப்பால் சில அசாதாரண சூழ்நிலைகள் நிலவுவதால், மீனவர்களை மீட்டு வருவதற்குச் சற்று காலதாமதம் ஏற்படுவதாகத் தெரியவருகிறது. மீனவர்கள் விரைவில் மீட்கப்பட்டு பத்திரமாகச் சொந்த ஊர் கொண்டுவரப்படுவார்கள்" என்று விளக்கம் அளித்துள்ளனர்.
விடுதலை செய்யப்பட்டும் தாயகம் திரும்ப வழியின்றி தவிக்கும் 31 மீனவர்களின் நிலை, அவர்கள் வெளியிட்டிருக்கும் உருக்கமான வீடியோ பதிவுகள் காரணமாக நாகை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை உடனடியாகத் தலையிட்டு, மீனவர்களை விரைந்து மீட்டு பத்திரமாகத் தாயகம் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






















