”இந்த வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்” - துரை முருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு சீமான் கண்டனம்
தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவருவதாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும் சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ‘சாட்டை’ துரைமுருகன் சில வாரங்களுக்கு முன்னதாக ஜாமினில் வெளியே வந்தார். தனது ‘சாட்டை’ யூடியூப் தளத்தில் அவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பாஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 9 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக பேசியிருந்தார். இந்த வீடியோதான் பாஸ்கான் ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைவதற்கு காரணம், பொய்யான தகவலை பரப்பி கலவரத்தை தூண்டினார் என கூறி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி தில்லை நகரில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு சென்ற சைபர் குற்றபிரிவு ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீசார் கடந்த 19ஆம் தேதி அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருடைய ஜாமீன் இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு என்ற தகவல் நேற்று வெளியானது. அதாவது, தொடர்ந்து வன்முறையை தூண்டும் விதத்தில் பேசிவருவதாலும் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாலும் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் திருவள்ளூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சாட்டை துரைமுருகம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதிற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தொடரப்பட்ட புனைவு வழக்குகளில் பிணையில் வெளிவந்துவிடக்கூடாது என்ற குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சமாகும். தம்பி துரைமுருகன் சமூக ஊடகம் மூலம் ஏற்படுத்தும் அளப்பரிய தாக்கத்தைச் சகிக்க முடியாது. சிறைதண்டனை மூலம், அவரை உளவியலாக அச்சுறுத்தி முடக்க நினைக்கும் திமுக அரசின் கொடுங்கோன்மைபோக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்!https://t.co/wEf8enLxdK pic.twitter.com/sSMguCmovG
— சீமான் (@SeemanOfficial) January 3, 2022
மாற்றுக்கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்பவரை, ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும், அதிகார அத்துமீறலுக்கு எதிராகவும் அறத்தின் பக்கம் நின்று குரல் எழுப்புவோரையும் தொடர் சிறைவாசம் மூலமாகச் சித்ரவதை செய்து, தனக்கு எதிராக எவ்வித எதிர்க்கருத்தும் எழவேக்கூடாது என்கின்ற ஆளும் திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையால், சனநாயக மாண்புகளும், கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறது. சனநாயக விழுமியங்களின் மீது பற்றுறுதி கொண்டவர்கள் கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் இதுபோன்ற கொடுங்கோல்போக்கினை எதிர்த்துப்போராட எதிராகக் குரல் கொடுக்க அணிதிரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்