MR Vijaybhaskar Property: 5 ஆண்டுகளில் 55% அதிகரித்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு..!
2016 தேர்தலின் போது 2.51 கோடியாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 2021 தேர்தலில் 8.62 கோடியாக உயர்ந்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமாக கரூர், சென்னையில் உள்ள 26 இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை அரசியல் பழிவாங்கும் முயற்சி என அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
35 ஆண்டுகளாக தொழில் செய்து வருவதாகவும், தனக்கு சென்னையிலும், கரூரிலும் சொந்த வீடுகள் இல்லை எனவும் தான் வாடகை வீட்டில்தான் குடியிருந்து வருவதாகவும் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார், மேலும் விசைத்தறி, சாயப்பட்டறை, க்ரஷர் யூனிட், அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் தனக்கு இருப்பதாகவும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தனக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்திருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, லஞ்ச ஒழிப்பு சோதனையில் எந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியும் இல்லை எனவும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் திமுக அளித்த புகார்களின் அடிப்பட்டையிலேயே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாகவும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பையும் நடந்து முடிந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பும் எவ்வுளவு எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் 26 லட்சம் ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்த முதலீடு, பல்வேறு நிறுவனங்களில் நடந்த பணப்பரிவர்தனைகள் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான வங்கி லாக்கர்களையும் கைப்பற்றி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இந்த தொடர் சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பானது 5 ஆண்டுகளில் 55% வரை அதிகரித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கலின் போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனக்கு 2 கோடியே 51 லட்சத்து 91 ஆயிரத்து 378 ரூபாய்க்கு சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் தனக்கு 8 கோடியே 62லட்சத்து 35 ஆயிரத்து 648 ரூபாய்க்கு சொத்துகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வரவு செலவு கணக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வு செய்ததில்அவரது சொத்து மதிப்பு 55 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.