Annamalai on kanimozhi Speech: சமூக நீதி பற்றிய கருத்து; எம்.பி கனிமொழியிடம் கேள்விகளை எழுப்பிய அண்ணாமலை..
மக்களவையில் சமூக நீதி பற்றி கனிமொழி பேசியதுதொடர்பாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தி.மு.க. எம்.பி. கனிமொழி நாடாளுமன்றத்தில் பேசியது தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை விவகாரம்:
இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ தி.மு.க.வினர் தங்கள் கட்சியின் கூட்டங்கள் என்று கருதி நாடாளுமன்றத்தில் பொய்களையும், பாதி உண்மைகளை மட்டுமே பரப்பி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது நேற்று மக்களவையில் தனது கட்சியின் நீண்டகால மரபுக்கு ஆதரவாக பேசினார். தி.மு.க.வின் சமூக நீதியையும், அதன் வளர்ச்சியையும் பற்றி அவர் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமீபத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மனிதர்களின் மலத்தை கலந்த விவகாரத்தில் இன்றளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க. அமைச்சர் ஒருவர் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவரை சாதி பெயர் சொல்லி திட்டி இழிவுபடுத்தினார். சுதந்திர மற்றும் குடியரசு தின விழாக்களில் தேர்வு செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகளை தேசிய கொடியேற்ற அனுமதிக்கவில்லை.
தரக்குறைவான பேச்சு:
தி.மு.க. மக்களவை உறுப்பினர் ராஜா பட்டியலின மக்கள் பற்றி பேசியது தேசியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு இந்து ஆலயங்களை உடைத்ததை பெருமையாக கூறினார். சமீபத்தில், தி.மு.க. நிர்வாகி இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்து தகாத வார்த்தைகளில் தரக்குறைவாக பேசினார். கடந்த 20 மாதங்களில் தி.மு.க.வின் இதுபோன்ற சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை செய்தித்தாளின் 20 பக்கங்களிலும் நிரப்பலாம்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது தொடர்பான மசோதா. மத்திய நுழைவுப்பட்டியலில் எப்படி சட்டம் இயற்ற அனுமதிக்கப்படுகிறது? என்பதை தமிழக அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. பாராளுமன்ற உரையில் ஏன் திருக்குறளை குறிப்பிட மறந்துவிட்டார்கள்? என்று கனிமொழி கேள்வி எழுப்பினார். தமிழ் மொழியை பிரதமர் மோடி பாராட்டினர் என்பதை நினைவுபடுத்துகிறோம். பிரதமர் மோடி திருக்குறளை 13 மொழிகளில் காசி தமிழ்சஙகமம் நிகழ்ச்சியில் வெளியிட்டுள்ளார்.
பேனா சிலை:
கனிமொழி சார்ந்துள்ள தி.மு.க. ஏன் திருவள்ளுவர் சிலையை காட்டிலும் 1 அடி உயரமாக பேனா சிலையை அமைக்க முயற்சிப்பது ஏன்? அவர்களது பொய்கள் மற்றும் பாதி உண்மைகளில் கீழே குறிப்பிட விரும்புகிறேன். தி.மு.க. அரசு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிரமப்பட்டு வருகிறது. தி.மு.க. 10 லட்சம் வேலைவாய்ப்புகளை ஆண்டுதோறும் ஏற்படுத்துவோம் என அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது.
தி.மு.க. மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு 5.5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அளித்த வாக்குறுதிகள் பற்றி எந்த செய்தியும் இல்லை. மத்திய அரசு பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது.
2013-2014ம் ஆண்டில் 4295.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2022-2023ம் ஆண்டில் பழங்குடியினர் நலனுக்காக ரூபாய் 12 ஆயிரத்து 461.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு எப்போதும் ஏன் அதிக நிதி ஒதுக்கீடு என கேட்கும் தி.மு.க. அரசிடம் நாங்கள் கேட்பது, தி.மு.க. கூட்டணியில் இருந்த 2006-2014ம் ஆண்டில் சமஸ்கிருதத்திற்கு ரூபாய் 675.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தமிழுக்கு ரூபாய் 75.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரயில்வே துறை:
தி.மு.க. எம்,பி. கனிமொழி குறைவான அளவே ரயில்வே துறைக்கு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு (2023-2024) செய்யப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது 30 ஆயிரத்து 961 கோடி மதிப்பிலான ரயில்வே பணிகள் நடைபெற்று வருகிறது.
கோபாலபுரம் குடும்பம் நடத்தும் தமிழ்நாடு அரசிடம் இருந்து பட்டியலின சகோதர, சகோதரிகளுக்கான 13 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் ஏன் இன்னும் செலவிடப்படவில்லை? என்ற கேள்விக்கு இன்னும் பதில்வரவில்லை. கனிமொழி இதற்கான பதிலை கண்டுபிடித்து தருவார் என்று நாங்கள் நம்புகிறோம்.”
இவ்வாறு அண்ணாமலை பேசியுள்ளார்.