Senthil Balaji on EPS: டிவி பார்க்காத, மக்கள் மீது அக்கறை இல்லாத நபர்தான் எடப்பாடி பழனிசாமி - செந்தில் பாலாஜி
மக்கள் மீது அக்கறை இல்லாத எதிர்க்கட்சி தலைவர்தான் எடப்பாடி பழனிசாமி என, அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
மக்கள் மீது அக்கறை இல்லாத எதிர்க்கட்சி தலைவர்தான் எடப்பாடி பழனிசாமி என, அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
”மக்கள் மீது அக்கறை இல்லாத ஈபிஎஸ்”
நிதிநிலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்குமான பட்ஜெட்டாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களாலும் வரவேற்கப்பட்டு, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிநிலை அறிக்கை என்று பாராட்டப்படுகிறது.
இந்த சூழலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நிதிநிலை அறிக்கை வாசிக்க தொடங்கியதுமே வெளிநடப்பு செய்தார். குறிப்பாக மக்கள் மீது அக்கறை கொண்ட எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால், முழு நிதிநிலை அறிக்கையை கேட்டு அதில் என்னென்ன சிறப்பு திட்டங்கள் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அதன்பிறகு அவற்றின் மீதான கருத்துகளை வெளியிட்டு இருக்கலாம். மாறாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என நினைத்து, உள்ளே அமர்ந்து அதனை கேட்பதற்கு மனமில்லாமல் வெளிநடப்பு செய்திருக்கிறார்.
”டிவி பார்க்காத ஈபிஎஸ்”
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து நான் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டென் என கூறியவர்தான் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது ஆட்சிக்காலத்தில் தான் நாட்டையே உலுக்கிய கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு, பொள்ளாச்சி சம்பவம் போன்றவை நிகழ்ந்தது. அவற்றை தனது வசதிக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார், மறைத்துவிட்டார். ஆனால் இவர்தான் சட்டஒழுங்கை சிறப்பாக கட்டிக்காத்துவரும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக விமர்சிக்கிறார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் மகத்தான ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
திருச்சி சம்பவத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரியாமலேயே எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். ஒருவேளை தொலைக்காட்சி எதையும் பார்க்காமல் அவர் இந்த கருத்தை தெரிவித்து இருப்பார் போல. மகளிருக்கு செல்போன் வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை அதிமுக நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பியதோடு, திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறினார். மீதமுள்ள வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவது குறித்து பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை பார்க்காமலேயே விமர்சனங்களை முன்வைத்து வரும் எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே தன்னை தலைவராக முன்னிலைப்படுத்த முயற்சித்து வருவதாகவும்” அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டினார்.