Senthil Balaji: இதய பிரச்சினையை காரணம் காட்டிய செந்தில் பாலாஜி.. உச்சநீதிமன்றம் வைத்த செக்...!
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு விசாரணை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
செந்தில்பாலாஜி நிலை
2011-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு வேலை வாங்கி தருவாக கூறி பணம் பெற்றதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பலரும் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் சிறையில் தான் இருந்து வந்தார். இதனிடையே அவ்வப்போது உடல்நிலை பாதிப்பால் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
முன்னதாக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி விசாரித்தது. அப்போது செந்தில்பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பு விசாரணை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து வழக்கு விசாரணை நவம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.
இதனை நீதிபதிகள் பேலே எம் திரிவேதி, சதீஷ் சந்திரா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது செந்தில் பாலாஜியின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கை தாக்க செய்யப்பட்டது. மேலும் அவருக்கு இதய பிரச்சினை இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமலாக்கத்துறை தரப்பில், “செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என எங்கும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையை தாக்கல் செய்ய கூறியதோடு நவம்பர் 28 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
மேலும் படிக்க: Governor Ravi: ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை