மேலும் அறிய
அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனுத்தாக்கல்
இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிடவும் இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது.

அமைச்சர் பொன்முடி - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பில் அரசு தரப்புக்கு உதவியாக தங்களை விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சாட்சிகள் விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதியன்று தொடங்கியது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற தாசில்தார் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் சார்பில் முன்னாள் அரசு தரப்பு வழக்கறிஞர் சீனிவாசன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், திமுக ஆட்சியின் போது செம்மண் குவாரி முறைகேடு செய்தது தொடர்பாக அக்காலக்கட்டத்தில் முறையாக விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலவரங்களை கண்டறிந்து செம்மண் குவாரி முறைகேடு சம்பந்தமாக தெளிவான தகவல்களுடன் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சாட்சியங்களிடமும் உண்மையான வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது.
அதன் பிறகு 2021-ல் தி.மு.க. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு விசாரணை வேகம் பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 10-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் அவர்கள், பிறழ் சாட்சியமாக மாறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்திருக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அரசு பணியில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? எனவே அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு எங்களையும் அனுமதிக்க வேண்டும். மேலும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்கவும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதிடவும் இந்திய பிரஜையான அனைவருக்கும் உரிமை உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் வேறு மாநிலங்களில் மனுதாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது போல் நான் இம்மனுவை தாக்கல் செய்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் ஒவ்வொருவராக அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியமாக மாறி வருகிற நிலையில் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் திடீரென மனுத்தாக்கல் செய்துள்ளது இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion