அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகின்ற 17-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செயல்பட்ட செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் எம்பியுமான பொன்.கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு சாட்சிகள் விசாரணை கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் இதுவரை 11 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில் ஓய்வுபெற்ற தாசில்தார் குமாரபாலன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமாரன், பூத்துறை கிராம உதவியாளர் ரமேஷ், முன்னாள் கிராம உதவியாளர் கோபாலகண்ணன், நில அளவைத்துறை முன்னாள் துணை ஆய்வாளர் நாராயணன், கனிமவளத்துறை முன்னாள் துணை இயக்குனர் சுந்தரம், ஓய்வுபெற்ற தாசில்தார் மாணிக்கம், ஓய்வுபெற்ற நில அளவையர் அண்ணாமலை, பாஸ்கர் ஆகிய 9 பேர், இவ்வழக்கு சம்பந்தமான கோப்புகளில் தங்களிடம் அப்போதிருந்த உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாகவும், தங்களுக்கு இந்த முறைகேடு பற்றி எதுவும் தெரியாது என்றுகூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி. ஆகிய இருவரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி, மனுதாக்கல் செய்தார்.
அம்மனு ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அம்மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பு வழக்க்றிஞர் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்க ஏதுவாக மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும்படி கேட்டனர். இதை ஏற்ற மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்