Melmaruvathur Bangaru Adigalar: மாதவிடாய் காலத்திலும் பூஜை.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்.. ஆன்மீகத்தில் புரட்சி- யார் இந்த பங்காரு அடிகளார்?
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் தனது 82வது வயதில் இன்று (அக்டோபர் 19ம் தேதி) காலமானார்.
கடந்த 1941 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மேல்வருவத்தூர் பகுதியில் பிறந்தவர் தான் சுப்பிரமணி என்ற பங்காரு அடிகளார்.
இளமைப்பருவம்:
இவரது தந்தை பெயர் கோபல நாயக்கர், தாயார் பெயர் மீனாம்பாள். இவரின் குடும்பம் அன்றைய காலக்கட்டத்திலேயே செல்வ செழிப்புடன் இருந்து வந்தது. அவர்கள் வசித்த பகுதியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கான தீர்ப்பு வழங்கும் இடத்தில் இருந்தவர்கள் இவரது தாத்தா துரைசாமி நாயக்கரும் இவரது தந்தையார் கோபால நாயக்கரும் தான்.
இப்படி செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த பங்காரு அடிகளார் தனது தொடக்க கல்வியை சோத்துப்பாக்கம் பகுதியில் பயின்றார். அதேபோல் உயர்கல்வியை அச்சிரபாக்கம் பகுதியிலும் பயின்றார். இதனை அடுத்து செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இணைந்து ஆசிரியராக பயிற்சி பெற்றார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் அச்சிரப்பாக்கம் பகுதில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக தனது பணியை தொடங்கினார்.
ஆதிபராசக்தியின் அருள்கிடைத்தது எப்படி?
ஆசிரியராக பணிபுரிந்த சமயத்தில் தான் இவர் வாழ்வில் ஒரு அதிசய சம்பவம் நடந்ததாக அவரை தெய்வமாக வணங்கும் பக்தர்கள் கூறுகின்றனர். அந்த சம்பவம் நடந்தது கடந்த 1966 ஆம் ஆண்டில் ஒரு நாள் இவரது குடும்பத்தில் விழா ஒன்று நடைபெற்றது.
ஆசிரியாக பணியாற்றி கொண்டிருந்த பங்காரு அடிகளாரும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். அப்போது திடீரென இவரை ஆதிபராசக்தி ஆட்கொண்டதாகவும் , கடினமான தீபாராதனை தட்டை தன் கைகளால் வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அவர் மேல்மருவத்தூரில் அற்புதம் ஒன்று நிகழப்போவதாகவும், தான் அங்கே கோவில் கொள்ளப்போவதாகவும் பங்காரு அடிகளார் மூலம், ஆதிபராசக்தி அம்மன் அறிவித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பங்காரு அடிகளார் வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரத்தில் பால் வாடிவதாக ஊர் முழுதும் தகவல் பரவியது. அந்த நேரத்தில் இந்த செய்தியை கேள்விபட்ட பலரும் மேல்வருவத்தூர் நோக்கி படையெடுத்தனர்.
அந்த நேரத்தில் தமிழின் சில முன்னணி நாளிதழ்களில் மேல்மருவத்தூர் தொடர்பான கட்டுரைகள் பல வெளியாகின. இப்படி அந்த வேப்பமரம் அமைந்திருந்த இடத்தில் தான் தற்போது ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
முறிந்த மரம் உருவான கோவில்:
கடந்த 1966 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் ஒன்று 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை அருகே கரையை கடந்தது. அந்த புயல் ஏற்படுத்திய சேதாரம் ஏராளம். இவ்வாறாக அந்த புயலின் தாக்கம் பங்காரு அடிகளாரின் ஊரான மேல்மருவத்தூரிலும் எதிரொளித்தது.
அதன் தாக்கத்தால் பலரின் வீடுகள் அங்கு சேதமாகின. இதனிடையே கடந்த 1966 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி பங்காரு அடிகளார் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் வேரோடு முறிந்து விழுந்தது. அந்த இடத்தில் இருந்த புற்றும் மழைநீரால் முழுவதுமாக கரைந்து இருந்தது. அப்போது அந்த இடத்தில் சுயம்பாக கல் ஒன்று தோன்றியதாக கூறப்படுகிறது.
கோவில் உருவானது எப்படி?
உடனே மக்கள் அந்த கல்லை இது தான் ஆதிபராசக்தி என்று கும்பிட ஆரம்பித்தனர். சுயம்புவாக அம்மன் தோன்றிவிட்டதாக செய்திகள் ஊர் முழுதும் வேகமாக பரவியது. இந்த தகவலை கேள்விபட்ட பங்காரு அடிகளார் சுயம்பு தோன்றிய இடத்தில் அன்னை ஆதிபராசக்தி கோவில் கட்டுமாறு தனக்கு கட்டளையிட்டுவிட்டாள் என்று கூற. அந்த இடத்தில் சிறிய அளவிலான கூரை கொட்டகையால் கோவில் கட்டப்பட்டது. ஒரு புறம் ஆசிரியராக பணியாற்றி வந்த பங்காரு ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அந்த கோவிலிலேயே தங்க ஆரம்பித்தார். அந்த சமயங்களில் அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தார்.
திருமண வாழ்வு:
கடந்த 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லற வாழ்வில் இணைந்தார் பங்காரு அடிகளார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி என்ற நான்கு குழந்தைகள் பிறந்தது.
பெண் பக்தர்களின் வருகை:
அந்த சமயத்தில் இந்த கோவிலின் புகழ் மெல்ல மெல்ல பல பகுதிகளுக்கு பரவ தொடங்கியது. அடுத்த சில ஆண்டுகளில் கோவிலின் புகழ் பட்டிதொட்டி எல்லாம் பரவ ஆரம்பித்தது. நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு புறம் சபரிமலைக்கு ஆண் பக்தர்கள் சென்று கொண்டிருந்த சமயத்தில் பெண் பக்தர்களின் வருகையால் திக்குமுக்காடியது மேல்வருவத்தூர். இதன்பின்னர் பெண்களுக்கான கோவில் என்ற அடையளத்தை பெற்றது மருவூர்.
அம்மா என்று அழைத்த பக்தர்கள்:
மேல்வருவத்தூர் வந்த பக்தர்கள் இவரை மருவத்தூர் அம்மனாக நம்ப ஆரம்பித்தனர். இதன்பின்னர் பக்தர்களால் “அம்மா” என்று அழைக்கப்பட்டார்.
ஆன்மிகத்தில் புரட்சி செய்த அடிகளார்:
இந்தியாவில் இன்றளவும் பல கோவில்களுக்குள் பெண்களை உள்ளே அனுமதிக்க மறுக்கப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவில்களில் உள்ளே சென்றால் தீட்டு என்றும், அதனை போக்க பல சிறப்பு யாகங்களையும் , பூஜைகளையும் நடத்த வேண்டும் என்றும் அனைத்து கோவில்களின் ஐதீகங்களும் தெரிவிக்கின்றன.
ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னரே பங்காரு அடிகளார் இதில் ஒரு மிகப்பெரிய ஆன்மீக புரட்சியை செய்தார். அந்த வகையில், மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு என்றும், அந்த நேரங்களில் கோவில்களுக்குள் நுழைவதில் ஒன்றும் புனிதம் கெட்டு விடாது என்றும் ஆணித்தரமாக நம்பினார் பங்காரு அடிகளார்.
அதை செயல்படுத்தவும் செய்தார். மேல்வருவத்தூர் கோவிலில் மாதவிடாய் நேரத்திலும் பெண்கள் வழிபடலாம் என்றும், கோவிலின் கருவறையில் இருக்கும் ஆதிபராசக்தியை தங்கள் கைகளால் தொட்டு வழிபாடு நடத்தலாம் என்றும் அறிவித்து, அதனை செயல்படுத்தியும் காட்டினார்.
அனைத்து ஜாதியினரையும் அன்றே அர்ச்சகராக்கியவர்:
தி.மு.க.வின் ஆன்மிக புரட்சிகளை செய்து காட்டியவர் பங்காரு அடிகளார். அண்மையில் கூட பழனி முருகன் கோவிலுக்கு மாற்றுமதத்தினர் சென்று வழிபாடு நடத்த அனுமதி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால், அன்றைய காலக்கட்டத்திலேயே பெண்கள் மட்டும் இன்றி அனைத்து சாதியினரும், அனைத்து மதத்தினரும் கருவறை வரை சென்று வழிபடலாம் என்று அறிவித்தார்.
அதன்படி முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே அனைவரும் கோவிலின் கருவறைக்குள் சென்ற தீபாராதனை காட்டி அம்மனை வழிபடலாம் என்று கூறியதன் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கினார். இதன்மூலம் பாலின மற்றும் சாதி, மத வேறுபாடுகளை களைத்து ஒரு புதிய முன்மாதிரியான கோவிலாக அறிமுகப்படுத்தி ஆன்மீக புரட்சி செய்திருந்தார் பங்காரு அடிகளார். அதேபோல் அறக்கட்டளை நிறுவி பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார் அடிகளார்.
பெரியாரும், கருணாநிதியும் ஆசைப்பட்டதை செய்து காட்டியவர்:
திமுக நிர்வாகிகள் சிலர் மேல்வருவத்தூர் அமைப்பு என்பது திராவிட இயக்கத்தின் மறுபதிப்பு என்று கூறினர். மேலும், பெரியார் நாத்திகராக என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை ஆன்மீக வாதியாக செய்து வருவதாகவும் மனித நேயத்தை வளர்க்கும் இயக்கங்களில் முக்கியமானதாகா இருப்பதாகவும் இன்றைய திமுக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெருமைபட கூறியது வரலாறு.
மேல்வருவத்தூர் கோவிலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் பங்காரு அடிகளார். இதைத்தான் பெரியாரும், கருணாநிதியும் விரும்பினார்கள் என்று அப்போது பொன்முடி தெரிவித்திருந்தார்.
பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவம்:
பங்காரு அடிகளாரின் ஆன்மிகச் சேவையைப் பாராட்டி கடந்த 2019 ம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த நிலையில், ஆன்மீகத் தொண்டிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்து வந்த இவர், கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனை மற்றும் வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (அக்டோபர் 19) மாரடைப்பால் காலமானார். இவரின் இந்த மறைவுச் செய்தி பக்தர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.