AIADMK: 'தன்னிச்சையான முடிவு.. கட்சியிலிருந்து நீக்கியது நியாயமற்றது..' உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம்
அதிமுகவின் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என்றும், பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆர் நோக்கத்திற்கு விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் விசாரணை தொடங்கியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
அதிமுக பொதுக்குழு
கடந்தாண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதோடு சில தீர்மானங்களும் இயற்றப்பட்டது. . பொதுக்குழுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனி நீதிபதி அளித்த தீர்ப்பு சாதகமாகவும், இரு நீதிபதிகள் அமர்வு கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பு எதிராகவும் அமைந்தது.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்தை ஓ.பன்னீர்செல்வம் நாடினார். ஆனால் அங்கு பொதுக்குழு நடந்தது செல்லும் என தீர்ப்பு வெளியானது. ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது தொடர்பாக தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் விசாரிக்கப்பட இருந்தது.
பொதுச்செயலாளர் தேர்தல்
இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு மார்ச் 17 ஆம் தேதி தொடங்கியது. மார்ச் 19 ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு அளித்திருந்தார். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை மார்ச் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவசர வழக்காக நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார்.
இதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் என்றும், முடிவை அறிவிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும் பொதுக்குழு தீர்மானங்கள் வழக்கை முன்கூட்டியே (மார்ச் 22) ஆம் தேதி விசாரித்து பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கில் மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி கூறினார்.
ஓபிஎஸ் தரப்பு வாதம்
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், அதிமுகவின் இரட்டை தலைமையை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது என்றும், பெரும்பான்மை உள்ளது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு கட்சி நிறுவனர் எம்ஜிஆர் நோக்கத்திற்கு விரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தான் கட்சியில் 1977 ஆம் ஆண்டில் இருந்து கட்சியில் இருக்கும் ஓபிஎஸ் பொருளாளர்,அமைச்சர், முதல்வர் மற்றும் கட்சியின் முக்கியமான நேரங்களில் செயல்பட்ட விதம் குறித்து விவரிக்கப்பட்டது.
காரணமே இல்லாமல் நீக்கியம்
அதேபோல் எந்த வாய்ப்பும் அளிக்காமல், காரணத்தையும் கூறாமல் கட்சியிலிருந்து நீக்கியது நியாமற்றது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என சொல்லிவிட்டு மீண்டும் அந்த பதவியை கொண்டு வந்துள்ளனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதி, நிபந்தனைகள் விதிக்கப்பட்டது எனவும் ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் முன்வைத்தார்.
அடிப்படை உறுப்பினர்களாலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டார்கள். அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய முடியும். அந்த விதியை பொதுக்குழு திருத்த முடியாது என பல வாதங்கள் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது.