அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் ஆர்டர் போட்டதன் காரணம் என்ன?
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் துரைமுருகன். இவர் திமுக-வின் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளார். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலும் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்:
கடந்த 2006- 2011யில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக துரைமுருகன் பொறுப்பு வகித்தார். அப்போது, 2007- 09 காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.40 கோடி சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மீதும், அவரது மனைவி சாந்தகுமாரி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரியை நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக சாந்தகுமாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டுகோள் விடுத்தார்.
திமுக-வினர் அதிர்ச்சி:
இதையடுத்து, சாந்தகுமாரியின் பிடிவாரண்டை ரத்து செய்த நீதிமன்றம், நேரில் ஆஜராகாத அமைச்சர் துரைமுருகன் செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என்று பிடிவாரண்ட் பிறப்பித்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பது திமுக-வினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
கடந்து வந்த பாதை:
முன்னதாக, லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது வேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்தபோது அந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை விடுவித்தது.
பின்னர், மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2017ம் ஆண்டு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக மேல்முறையீடு செய்தனர்.
பின்னர், இந்த வழக்கின் விசாரணை தற்போது வரை நடந்து வருகிறது.



















