கரூர் : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மகிழ்ச்சியில் பக்தர்கள்..!
கரூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் வரும் அனைத்து பக்தர்களும், வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தபின்பு அனுமதிக்கப்படுகிறார்கள்
கரூர் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் முத்துக்குமாரசுவாமி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நீண்ட நாட்களாக வெளியூர் பயணம் மேற்கொள்ள இருந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், இன்று காலை 6 மணிமுதல் பக்தர்கள் வருகை தரும்போது, ஆலயம் வரும் அனைத்து பக்தர்களுக்கும் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பக்தர்களுக்கு ஆலயத்திற்குள் அனுமதியளிக்கப்படுகிறது. அதேபோல் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய பேரிகார்டு அமைத்து சிறப்பான முறையில் ஏற்பாடு செய்துள்ளன. இந்நிலையில் பக்தர்கள் தற்போது ஒருவர் பின் ஒருவராக ஆலயம் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் , தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் பல்வேறு தமிழக அரசு கட்டுப்பாடு விதிமுறைப்படி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல், உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ கரூர் மாரியம்மன் பின்னர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்கள் இன்று முதல் 6 மணி இருந்து பக்தர்கள் தரிசிக்க சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கரூரில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு போலீசாருடன் வேலிகள் அமைத்து சிறப்பான முறையில் மது பிரியர்களுக்கு தங்கு தடையின்றி தங்களுக்குத் தேவையான மது பொருட்களை வாங்கிச் செல்ல பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் ஒரு அரசு மதுபான கடைக்கு 2 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மது பிரியர்கள் நீண்ட நாட்களாக மதுவை அருந்தாத நிலையில், தற்போது இன்று காலை 10 மணி முதல் மாலை வரை செயல்பட உள்ள அரசு மதுபான கடைக்கு அதிக அளவில் மது பிரிவுகள் வருகை எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், இன்று உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல்வேறு உணவகங்களும் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் நகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், சூப்பர் மார்க்கெட் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் மாவட்ட மக்கள் அதிகளவில் தங்களது பணிக்காக காலை முதலே தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வழக்கத்தை விட கரூரில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனினும், மக்கள் சமூக இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல், ஏதேனும் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை நாடுதல் என தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து விதிகளையும், மாவட்ட மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.