மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயரை வைப்பது?.. இபிஎஸ் ரொம்ப தப்பு பண்றீங்க இபிஎஸ்.. எச்சரித்த கிருஷ்ணசாமி
மதுரை விமான நிலையத்திற்கு யார் பெயர் வைப்பது தொடர்பாக அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனம் வைத்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தனது 5ஆவது கட்ட சுற்றுப்பயணத்தை திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசியமும் தெய்வீகமும் இருகண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார். அதேபோன்று தனது சொத்துக்களை சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்கு தானமாக கொடுத்தார். ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திலும் போட்டியிட்டு வெற்றியும் கண்டார்.
எனவே, முத்துராமலிங்கத் தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம் என இபிஎஸ் கூறியிருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் தமமுக கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர். இதுதொடர்பாக டாக்டர் கிருஷ்ணசாமி தனது சமூகவலைதள பக்கத்தில், "எடப்பாடி பழனிச்சாமி , தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனைத்து மக்கள் நலன் சார்ந்த விஷயங்களைப் பேசாமல், குறுகிய கண்ணோட்டத்துடன் பேசுவது அவசியமற்றது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஓட்டை உடைசல்களைச் சரி செய்வதை விட்டுவிட்டு, வேறொன்றில் கால் வைக்க முயன்றால், எடப்பாடி அரசியல் வாழ்விற்கு உள்ளதும் போச்சடா லொள்ளக் கண்ணா என்ற சூழ்நிலை ஏற்பட்டு விடும்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன், "மதுரை விமான நிலையத்திற்கு பெயர் வைப்பது குறித்த இபிஎஸ்-யின் பேச்சு தேவையற்றது. தேர்தல் நேரத்தில் மக்கள் மத்தியில் இதுபோல் பரப்புரை செய்வது தங்கள் அரசியல் லாபத்திற்கு ஆபத்து விளைவிக்கும். உங்களது பயணம் தொலைநோக்கு எண்ணத்துடன் இருக்க வேண்டுமே தவிற குறுகிய எண்ணத்தில் இருப்பது ஆபத்தானது என விமர்சித்துள்ளார்.





















