கொல்கத்தாவில் தீக்கு இரையான 3 உயிர்கள்.. சோகத்தில் மூழ்கிய கரூர் மக்கள்
நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த கரூரைச் சேர்ந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். பிரபு மற்றும் அவரது மனைவி மதுமிதா மற்றும் குழந்தைகள் தியா ( 10 ) ரிதன் (3) மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ( 61) ஆகியோருடன் கொல்கத்தாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஐந்து மாடிகளை கொண்ட தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர். நேற்று இரவு குழந்தைகள் மற்றும் மாமனாருக்கு உணவு வாங்குவதற்காக பிரபு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, திடீரென்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பிரபுவின் இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் ஆகிய மூவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொல்கத்தாவில் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகள் தங்களது தந்தை தாயுடன் இருக்கும் புகைப்படம்
இந்த நிலையில் உப்பிடமங்கலம் பகுதியில் உள்ள உயிரிழந்தவர்களின் உறவினர்களை கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் மற்றும் வட்டாட்சியர் குமரேசன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மூலமாக மேற்குவங்க அரசுத்துறை அதிகாரிகளிடம் விரைவாக உடல்களை கரூர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க பேசியுள்ளதாக உறவினர்களை நேரில் சந்தித்தபோது கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்களை விரைவில் சொந்த ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மூன்று பேர்களின் உயிரிழப்பால் கரூர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.





















