"கருணை கொலை செய்து என் வீட்டிலேயே புதைத்து விடுங்கள்" - சொத்தை ஏமாற்றிய பிள்ளைகள்...கலங்கும் தாய்
நானும், என் அம்மாவும் உன்னை ஏமாற்றி என் அம்மா தனலட்சுமி பெயருக்கு செட்டில்மெண்ட் எழுதி கொண்டதாக தெரிவித்துள்ளார்.
கரூரில் 73 வயது மூதாட்டி தன்னுடைய சொத்தை அபகரித்தும், கொலை செய்ய முயற்சிக்கும் மகள் மற்றும் பேரனிடமிருந்து காப்பாற்றக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தன்னை அரசே கருணை கொலை செய்து என் வீட்டிலேயே புதைக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் வள்ளுவர் நகரில் வசிப்பவர் தங்கம்மாள். இவருக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 40 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். 2 மகன்கள் மற்றும் 1 மகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து அவர்கள் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு இவரது மகள் தனலட்சுமி, பேரன் நடராஜின் மேல் படிப்பிற்காக மூதாட்டி வசிக்கும் வீடு மற்றும் கடைகளை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுவதாக கூறி கையெழுத்து பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளில் அடமானத்தை மீட்டு பத்திரத்தை தருவதாக கூறி படிப்பறிவு இல்லாத பாட்டியிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக அந்த மூதாட்டிக்கு தெரியாமல் இருந்த நிலையில் கடந்த 22.4.2023 அன்று மூதாட்டியின் வீட்டிற்கு வந்த பேரன் நடராஜன் மது குடிப்பதற்கு பணம் கேட்டதாகவும், மூதாட்டி தர மறுத்ததால் கோபத்துடன் வெளியேறிய பேரன் நடராஜன் குடிபோதையில் மூதாட்டியை கெட்ட வார்த்தையால் திட்டியதுடன், நானும், என் அம்மாவும் உன்னை ஏமாற்றி என் அம்மா தனலட்சுமி பெயருக்கு செட்டில்மெண்ட் எழுதி கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீட்டில் நீ இருக்கக் கூடாது என்றும், வீட்டை காலி செய்து செல்லவில்லை என்றால் கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என மிரட்டிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்துள்ளார். அதில் படிப்பறிவு இல்லாத மூத்த குடிமகளான எனது சொத்தை என் மகள் தனலட்சுமி அவரது மகன் நடராஜன் ஆகிய இருவரும் மோசடியாக ஏமாற்றி செட்டில்மெண்ட் பெற்றுக் கொண்டதுடன் எனது வீட்டிலிருந்து வெளியேற்றி கெட்டவார்த்தையால் திட்டி அடித்து கொலை முயற்சி செய்வதாலும், அவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறக்காமல், வலியில்லாமல் என்னை அரசு கருணை கொலை செய்து என் சொத்தில் பூத உடலை புதைத்தும், அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.