நிலப் பிரச்சனையால் ஒரே நேரத்தில் குவிந்த நூற்றுக்கணக்கான வாரிசுதாரர்கள் - கரூரில் பரபரப்பு
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்குள் இரண்டுக்கும் மேற்பட்ட இடப்பிரச்சினை சம்பந்தமாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தலையீடு இருப்பதாக கரூர் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் தனியார் இடத்தை அடியாட்கள் துணையுடன் ஒரு பங்குதாரர் பொக்லைன் எந்திரத்துடன் கம்பி வேலி போட்டு ஆக்கிரமிக்க முயற்சி செய்த நிலையில் மற்ற பங்குதாரர்கள் அதனை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவரது வாரிசுகள் 18 குடும்பத்தினருக்கு தன்னுடைய 7.5 ஏக்கர் நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். அதில் சரவணன் என்பவரின் ஒரு குடும்பத்தினர் மட்டும் முழு நிலத்தையும் தனக்கே சொந்தம் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் மற்ற பங்குதாரர்கள் 17 குடும்பம் மற்றும் அவரது வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு கடந்த 35 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த ஒரு குறிப்பிட்ட பங்குதாரர் மற்றும் அவரது வாரிசுகளின் தூண்டுதலின் பெயரில் அந்த 7.5 ஏக்கர் நிலத்திற்கும் கம்பி வேலி போட்டு 5 பொக்ளைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக வெங்கமேடு காவல் நிலையத்தில் வாரிசுதாரர்கள் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சரவணன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அரசாங்க பணியில் இருப்பதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தின் வாரிசுதாரர்கள் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார் பொக்லைன் இயந்திரங்களை வெளியேற்றியும், வழக்கு நிலுவையில் இருப்பதால் உள்ளே யாரும் பிரவேசிக்க கூடாது என்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் வெளியேற்றினர். நிலப் பிரச்சனை சம்பந்தமாக தேசிய நெடுஞ்சாலை அருகே நூற்றுக்கணக்கான வாரிசுதாரர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும், இந்த பிரச்சனை சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பெண்மணி சரசு என்பவர் கூறியபோது, “இது எனது அப்பா வீட்டு சொத்து சிறுக சிறுக சேர்த்து தான் இதை நாங்கள் வாங்கி உள்ளோம். தற்போது வரை நான் மட்டும் ரூபாய் 1.5 லட்சம் செலவு செய்துள்ளேன். தற்போது திடீரென புதிதாக ஒருவர் இது என்னுடைய இடம் எனக் கூறுவதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. விரைவாக எனது பிரச்சினையை தீர்த்து வைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறும்பொழுது, “இது பாரம்பரியமான இடம். இந்த இடத்தில் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. இருந்தபோதிலும் சில அரசுப் பணியில் இருந்து எங்களது இடத்தை கைப்பற்றும் நோக்கில் இதனை முயற்சி செய்து வருகின்றனர். தற்போது இந்த இடம் சம்பந்தமாக பல்வேறு மனுக்கள் வெங்கமேடு காவல் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக தற்போது நாங்கள் நீதிமன்றம் சென்று வழக்கு நடைபெற்று வரும் நிலையில் திடீரென மற்றொரு தரப்பினர் இரவோடு இரவாக இடத்தை சுத்தம் செய்ய ஆட்கள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை அனுப்பி உள்ளனர். விரைந்து இதற்கு நல்ல தீர்வு வரும் வரை யாரும் இந்த இடத்தில் சுத்தம் செய்ய அனுமதிக்க கூடாது என காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.