முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதல் தொகுதியில் அவலம்; 40 ஆண்டுகளாக காத்திருக்கும் பொதுமக்கள்..!
குளித்தலை பேரூராட்சியாக இருந்த நகராட்சியாக தரம் உயர்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாமல் வாடகை இடத்தில் தான் தற்காலிகமாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது.
குளித்தலை பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்வு பெற்று 25 ஆண்டுகள் ஆகிறது. இத்தனை ஆண்டுகளாக பஸ் நிலையம் இல்லாமல் வாடகை இடத்தில் தான் தற்காலிகமாக பஸ் நிலையம் இயங்கி வருகிறது. பேரால் அம்மன் கோயிலுக்கு சொந்தமான 1.22 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருவதால் வாடகை நகராட்சி கொடுத்து வருகிறது. பேரூராட்சிகள் இருக்கும் போது வாடகை வந்த இந்த பஸ் நிலையம் 40 ஆண்டுகளாக எந்த வசதியும் இன்றி இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் குளித்தலை,
கடம்பவனேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சுங்ககேட் ரவுண்டானா மேற்கு பகுதியில் உள்ள 4.75 ஏக்கர் நிலத்தை புதிய பஸ் நிலையம் அமைக்க நகராட்சி சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை நகராட்சிக்கு விற்பனை செய்யக்கூடாது என்று பக்தர்கள் சிலர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றனர். அது இன்று வரை நிலுவையில் உள்ளது. அதனால், புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால், இப்போது திமுக அரசு அதில் தற்காலிக பஸ் நிலையத்தை ஆவது விரிவாக்கம் செய்யலாம் என்று நினைத்து ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டதாக குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குளித்தலை நகராட்சி நிர்வாகம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள தற்காலிக நிலையத்தின் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தது. கோயில் அதிகாரிகள் பலமுறை நகராட்சி அலுவலகத்திலிருந்து நடந்து சென்று வாடகைக் கட்டணம் செலுத்தாததால் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருவதாக குளித்தலை நகராட்சி ஆணையர் கூறினார். மேலும், ரூபாய் 20 லட்சம் நகராட்சி நிர்வாகம் கோயிலுக்கு செலுத்தியுள்ளதாக ஆணையர் கூறினார் .
கடந்த ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திருப்பூர் அறநிலையத்துறை நீதிமன்றத்தில் நகராட்சி ஆணையர் ஆஜராக உள்ளார். இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு உண்டான இடமும் வழக்கில் உள்ளதால் விரிவாக்க பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், விரிவாக்கத்திற்கு தேவையான கூடுதல் இடத்தையும் நகராட்சி கோயில் நிர்வாகம் எப்படி வழங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசு ஆணை வெளியிட்டாலும் குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் நிலையம் விரிவாக்கப் பணி நடக்குமா என்று தெரியவில்லை. எப்படி பார்த்தாலும் குளித்தலையில் நல்ல ஒரு பஸ் நிலையம் அமையுமா என்பது கேள்விக்குறிதான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கலைஞர் முதல் தொகுதியில் அவலம் ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பொதுமக்கள் முதலமைச்சர் கண் திறப்பாரா என்று ஏக்கத்துடன் கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்