மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம்; கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் - மக்கள் கருத்து
மாணவர்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட்டுவிட்டு, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். எந்த மொழியையும் மாணவர்கள் விரும்பி கற்பதில் ஆட்சேபனை இல்லை.
மாநில கல்விக் கொள்கை குறித்த மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. சிஇஓ கீதா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், கல்வியாளர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கூறியதாவது, கல்வியாண்டில் பள்ளிக்கு ஒரு நாள் வந்திருந்தால் போதும், 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவரை தேர்ச்சி செய்து விட வேண்டும் என்ற கல்வித் துறையின் போக்கு தவறானது.
இப்படிப்பட்ட மாணவர்கள் 9வது படிக்கும் போதும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதும் போதும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். எனவே குறைந்தது 3ம் வகுப்பு முதல் தேர்வில் தேர்ச்சியாக வேண்டும் என்ற வகையில் தேர்வு நடைமுறையை மாற்றிட வேண்டும். நீதி போதனை வகுப்புகளை தொடக்கப் பள்ளியில் தொடங்கி பிளஸ் 2 வரை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோல் விளையாட்டையும் அமல்படுத்த வேண்டும்.
8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி என்ற நடைமுறை, உயர்ந்த கல்வியாளர்களையோ, படித்தவர்களையோ உருவாக்காது. கூலி தொழிலாளர்களை தான் அதிகம் உருவாக்குகிறது. காரணம் அதுவரை கஷ்டப்படாமல் தேர்ச்சி ஆகும் மாணவர்கள் அடுத்தடுத்து தேர்ச்சியாக கஷ்டப்படுகின்றனர். அதில் தோல்வி அடைந்து விட்டால் கூலி தொழிலாளியாக மாறிவிடுகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் பெரும்பாலும் 'டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்' களாகத்தான் மாறி உள்ளனர் அல்லது அங்கு மீட்டிங், இங்கு மீட்டிங், பயிற்சி வகுப்பு என்று அவர்கள் போகும் நிலை உள்ளது. அவர்கள் கற்பித்தலை மேற்கொள்ளவும், பள்ளியை கண்காணிக்கவும் அவர்களுக்கு நேரம் போதவில்லை. இந்த நிலை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்.
மாணவர்களுக்கு இலவசங்களை வழங்குவதை விட்டுவிட்டு, தரமான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். எந்த மொழியையும் மாணவர்கள் விரும்பி கற்பதில் ஆட்சேபனை இல்லை. அதே நேரத்தில் ஹிந்தியை போல் ஒரு மொழியை திணிப்பதை ஏற்க இயலாது. தமிழ், ஆங்கிலம் போன்றவற்றுடன் பிரிட்ஜ் உட்பட எந்த ஒரு மொழியையும் கற்கலாம். கல்வியை தனியார் மயமாக்குவதை ஏற்க இயலாது. அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அரசு வேலை என்ற நிலைபாட்டை ஏற்படுத்த முடியும். படிக்கும் படிப்பு தமிழ் வழியாக இருந்தாலும் சரி, ஆங்கிலம் வழியாக இருந்தாலும் சரி அவை ஒரே பாடத்திட்டமாக இருக்க வேண்டும். கல்லூரிகள் போல் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை செமஸ்டர் முறையில் நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.