திடீரென மயக்கம் போட்ட இளம்பெண் - கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
முன்னாள் ஆட்சியரின் சிறிய முயற்சியால் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் இளைஞர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் நூலகத்தில் இளம் பெண் ஒருவர் திடீரென மயக்கமுற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முதலுதவி செய்ய மருத்துவ வாகனம் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் பதட்டம் ஏற்பட்டது.
வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் தான்தோன்றி மலைப் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை மனுவாக வழங்கி தங்களது மனு மீது தீர்வு கண்டு வரும் நிலையில் முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கரின் சிறிய முயற்சியால் மாவட்ட ஆட்சித் தலைவர் நுழைவாயிலில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து அதன் தொடர்ச்சியாக நாள்தோறும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் செய்தித்தாள் மற்றும் புத்தகத்தை வாசித்து வருகின்றனர்.
மேலும் கடந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படாமல் இருக்க தரை தளத்தில் இருக்கைகள் அமைத்து தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளிடம் நேரடியாக மனுக்களை பெற்ற பிறகு பொதுமக்கள் மனுக்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக தற்போது வரை அந்த நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இன்று நூலகத்தில் புத்தகம் வாசிக்க வந்த இளம்பெண் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்ததால் அங்கு பணியில் இருந்த நிர்வாகிகள் தூக்கி வந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் வரக்கூடிய நிலையில் அவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சூழ்நிலை தவிர்க்கும் விதமாக மருத்துவ உதவி புரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவ வாகனங்கள் இல்லாததால் இதுபோல் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதன் மீது கவனம் செலுத்தி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சுகாதாரத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத் துறையின் சார்பாக பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.