கரூரில் மாற்றுத்திறனாளிக்கு மனு கொடுத்த ஒரே வாரத்தில் தொழில் கடன் - மின் ஆட்டோ வழங்கிய ஆட்சியர்
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மனு கொடுத்த ஒரே வாரத்தில் மின் ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், ஆட்சியர் பிரபுசங்கர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் முதல் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மின் ஆட்டோ வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு அண்மையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் பயன்பெறுவதற்காக ஆதிதிராவிட மக்கள் பிரதிநிதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 35 சதவீதம் முதலீட்டு மானியம் மற்றும் 6% வட்டி மானியம் 65 சதவீதம் வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாக நேர்காணல் நடத்தப்பட்டது. நேர்காணலின்போது பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி திருநாவுக்கரசு மின் ஆட்டோ வாங்குவதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். எந்த ஒரு விண்ணப்பத்தையும் குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த மனுவின் மீது ஒரே வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தமிழக அரசின் மானியமாக ரூ.1,62,000-ம் பள்ளப்பட்டி இந்தியன் வங்கி கிளை சார்பாக ரூ.3,02,000 கடன் உதவியுடன் மொத்தம் ரூ.4,64,000 மதிப்பில் மின் ஆட்டோ வழங்கப்பட்டு உள்ளது.
பிரத்யேகமாக கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரண்டு கைகளால் மட்டுமே இயக்கக்கூடிய வகையில் இந்த மின் ஆட்டோ வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் வகைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான வகையில் இந்த மின் ஆட்டோ வடிவமைத்து கொடுக்கப்பட உள்ளது. எனவே அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் ஆதி திராவிடர் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் செய்து பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் முதன் பயனாளியாக மாற்றுத்திறனாளி பயனாளியாக தேர்வு செய்தமைக்காக ஆட்சியருக்கு மாற்றுத்திறனாளிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரமேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. வசந்தகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் பள்ளபட்டி இந்தியன் வங்கி மேலாளர் த.வாலண்டினா ஆகியோர் உடன் இருந்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்