கரூரில் விமான நிலையம் அமைப்பதற்காக முதல் கட்ட பணிகள் தீவிரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்ததுபோல் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கரூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய விமானத்துறை (சிவில் அவியேசன்) அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவை சந்தித்து விட்டு நிருபர்களிடம் கூறும்போது, கரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது பற்றி மத்திய அமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, மத்திய அமைச்சர் சிந்தியா, இந்த திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஏற்கனவே தனது தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து இருந்தார். அது போல் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கரூரில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க பரிசீலிக்கப்படும் என்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில சங்கங்களின் நிர்வாகிகள் கூறியதாவது, ”அன்று ஆடம்பரம் இன்று அத்தியாவசியம்". கரூர் மாவட்ட சிட்கோ தலைவர் விஎன்சி பாஸ்கர் கூறியதாவது, கரூர் நகருக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் எளிதாக வந்து செல்ல வசதியாக ஒரு விமான நிலையத்தை ஏற்படுத்தி தர வேண்டும். கரூரில் விமான நிலையம் அமைத்தால் ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள மக்களும் அதனை பயன்படுத்தி கொள்வார்கள். எனவே விமான நிலையம் ஒன்றை கரூரில் அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் கரூர் வந்த தமிழக முதல்வரிடம் நேரடியாக தொழில் முனைவோர்கள் சார்பில் முறையிடப்பட்டது. அதன் எதிரொலியாக அதற்கான நடவடிக்கைகளை இவ்வளவு துரிதமாக எடுத்து செயல்படுவதை நான் பாராட்டுகிறேன். இதற்காக தமிழக முதல்வருக்கு கரூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வரும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் எல்லாம் விமான போக்குவரத்து உள்ளது. காலம் என்பது பொன்னானது. ஒரு காலத்தில் விமான போக்குவரத்து என்பது ஆடம்பரமானதாக இருந்தது. ஆனால் இப்போது விமான பயணம் என்பது அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. புதிய விமான நிலையம் கரூரில் அமைவதால், கரூர் மட்டுமின்றி சுற்றியுள்ள பல மாவட்டங்கள் தொழில் மேன்மை பெறும் என்றார்.
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் கேட்டபோது, கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்கு வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்தலின் போது நானும் எனது தேர்தல் அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் இப்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் எங்கு அமைப்பது என்று குறித்து ஆராய்ந்து முடிவு காண அதிகாரிகள் முதல் கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் நிலம் அடையாளம் காணப்பட்டு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும். கரூரில் விமான நிலையம் வந்தால் அது கரூர் மாவட்டம் சார்ந்த தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்