ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன? 600 பக்க அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்த ஆறுமுகசாமி ஆணையம்!
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று தனது முழு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இன்று தனது முழு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது.
ஜெயலலிதா மரணம்..
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது.
இது ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த 2017 செப்டம்பர் மாதம் முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். 14 முறை ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு 158 பேரிடம் ஆணையம் தனது விசாரணையை நிறைவு செய்திருக்கிறது. ஆணையம் சார்பாக இதுவரை 151 பேரிடமும், தங்களை விசாரிக்க வேண்டும் என்று தானாக முன்வந்த 7 பேரிடம் ஆணையம் விசாரணையை நடத்தியுள்ளது.
இதில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள்., சசிகலாவின் உறவினர்கள், ஐஏஎஸ் - ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்., காவல்துறை உயரதிகாரிகள்., போயஸ் கார்டனில் பணி செய்தவர்கள் என விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்றுள்ளது.
முடங்கியது..
இப்படிபட்ட சூழலில் தான் 90 சதவீத பணிகள் ஆணையத்தின் விசாரணை நிறைவடைந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மருத்துவர்களின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்வதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. ஆனால் ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு சென்ற அப்பல்லோ மருத்துவமனை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை வாங்கியது. இதன் காரணமாக சுமார் 2 வருடங்கள் எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளாமல் ஆணையம் முடங்கியது. பின்னர் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு அமைத்து ஆணையம் தனது விசாரணை மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது பின்னர் இறுதியாக ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தின் ஆஜராகி தனது வாக்கு மூலங்களை கொடுத்தார்.
தொடர்ந்து இந்த ஆணையம் பல மருத்துவர்களிடமும் குறுக்கு விசாரணையும் செய்தது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை 7 பேர் கொண்ட மருத்துவக் குழு தனது 3 பக்க அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுத்துள்ளது. அதில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என்று எய்ம்ஸ் மருத்துவ குழு கூறியது.
600 பக்க அறிக்கை..
இந்த நிலையில், இன்று தமிழ்நாடு அரசிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது அறிக்கையை கொடுக்க இருக்கிறது. இந்த அறிக்கை சுமார் 600 பக்கங்களுக்குள் கொண்ட அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் அலுவலகத்தில் ஆணையம் சார்பாக அறிக்கை சமர்ப்பிக்க நேரம் கேட்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் கொடுத்த நேரத்தில் (இன்று) ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவரது விசாரணை அறிக்கையை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.