சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் உயர் வெள்ள அபாய எச்சரிக்கை... இது லேட்டஸ்ட் அப்டேட்!
பேரிடர் மீட்புக் குழுவின் ட்வீட்டின்படி 07 நவம்பர் 2021 மாலை 5:30 மணிக்குத் தொடங்கி அடுத்து சுமார் ஆறு மணிநேரம் வரையில் இந்த மாவட்டங்களின் நீரோட்டப் பகுதிகளில் வெள்ள அபாயம் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் பணிக் குழு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி பேரிடர் மீட்புக்குழு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி இந்த மூன்று மாவட்டங்களில் மிதமானது முதல் அதிகமானது வரையிலான வெள்ள அபாயம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்புக் குழுவின் ட்வீட்டின்படி 07 நவம்பர் 2021 மாலை 5:30 மணிக்குத் தொடங்கி அடுத்து சுமார் ஆறு மணிநேரம் வரையில் இந்த மாவட்டங்களின் நீரோட்டப் பகுதிகளில் வெள்ள அபாயம் கணிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மழை பொழியும் சூழலில் அடுத்த ஆறு மணி நேரத்துக்கு இந்த நீரோட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
IMD FLASH FLOOD GUIDANCE CELL bulletin
— TN SDMA (@tnsdma) November 7, 2021
Persistent Flash Flood Threat (PFFT) till 1730 IST of 07.11.2021: Moderate to high threat over few watersheds and neighborhood of Tiruvallore, Kanchipuram and Chennai Districts of Tamil Nadu, met subdivision in next 06 hours. (1/2).
முன்னதாக, வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டிவருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகிறன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்துவந்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே பிற்பகல் 3 மணி அளவில் அணையின் நான்காவது மதகிலிருந்து மேலும் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. மாலைவரை மொத்தம் செம்பரம்பாக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், செம்பரம்பாக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட சுழலில் தற்போது அந்த அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.