சென்னை ஐஐடியில் செப்டம்பர் மாதம் முதல் புது கோர்ஸ்.. ஆன்லைனிலேயே படிக்கலாம்.. மாணவர்களே ரெடியா
BScஇல் ஏரோஸ்பேஸ் ட்ரோன் (aerospace drone) படிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆன்லைனில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம் என சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

முதல்முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பாக, மலைவாழ்வு மக்களும், கிராமப்புற மாணவர்களும் ஐஐடியில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
PALS நிறுவனத்தின் ஆண்டு விழா:
சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களின் அமைப்பு நடத்தும் பால்ஸ் PALS நிறுவனத்தின் 2025 - 2026 ஆண்டுக்கான ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி மற்றும் திருப்பதி ஐஐடி இயக்குனர் சத்யநாராயணா ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியதாவது, "பால்ஸ் (PALS) அமைப்பு சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்களால் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து ஐஐடி உதவிகளை செய்து வருகிறது.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தேவையான பாடத்திட்டங்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கான திறன் வளர்ப்பு பயிற்சி, கேட் தேர்வினை எழுதி எம்டெக் படிப்பில் சேர்வதற்கான பயிற்சி போன்றவற்றை அளித்து வருகிறோம்.
தற்பொழுது 50க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பால்ஸ் (PALS) அமைப்பில் இணைந்துள்ளன. மேலும், இதனை 100 கல்லூரியாக உயர்த்தும் அளவிற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஐஐடி முன்னாள் மாணவர்கள் சமூகத்திற்கு செய்யும் தொண்டு என இதனை கூறலாம்.
"சிவில் சர்வீஸ் பணிக்கும் பொறியாளர்கள் செல்ல வேண்டும்"
பால்ஸ் (PALS) நிறுவனத்தின் மூலம் படித்த மாணவர்கள் சென்னை ஐஐடியில் முதுநிலை படிப்பில் சேர்ந்துள்ளனர். கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐஐடியில் சேர்க்கின்றனர். உன்னத பாரதம் என்ற திட்டத்திற்கு கோர் இன்ஜினியரிங் பிரிவுகளில் அதிக பொறியாளர்களை உருவாக்க வேண்டும்.
அதில் நமக்கு அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுகிறது. நீடித்த நிலையான வளர்ச்சிக்கும் மனித சக்திகள் தேவைப்படுகிறது. சிவில் சர்வீஸ் பணிக்கும் பொறியாளர்கள் செல்ல வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளோம்.
சர்வதேச அளவிலான கியூஎஸ் ரேங்கில் இதுவரை 200க்கும் மேற்பட்ட எண்களில் இருந்தோம். இம்முறை 47 புள்ளிகள் அதிகமாக பெற்று 150வது இடத்தை பெற்றுள்ளோம். முதல் முறையாக 200 இடத்திற்குள் வந்துள்ளோம். ஆராய்ச்சி செய்த கட்டுரைகளை அதிக அளவில் அறிஞர்கள் பார்த்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் முதல் BSc (aerospace drone) படிப்பு:
கல்விப் பணி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கி தந்ததன் அடிப்படையில் இந்த இடத்தை பெற்றுள்ளோம். மாணவர்களுக்கான வேலை வாய்ப்பை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளோம். ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்ய வேண்டும். எனவே, பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.
நிலையான நீடித்த வளர்ச்சியில் மனித வளம் மற்றும் சுற்றுச்சூழலிலும் ஆய்வுகள் செய்ய வேண்டி உள்ளது. சர்வதேச தரவரிசை பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி முக்கியமாக தேவைப்படுகிறது.
எனவே, மருத்துவ தொழில்நுட்பத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்து 100 இடங்களுக்குள் இடம்பெறுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். மலைவாழ் மாணவி சென்னை ஐஐடியில் இடம்பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதேப்போல் மாணவர் ஒருவரும் நேவல் ஆர்க்கிடெக்சர் (கடல்சார்ந்த படிப்பு) சேர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
முதல் முறை பட்டதாரிகள் ஐஐடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக மலைவாழ்வு மக்களும், கிராமப்புற மாணவர்களும் ஐஐடியில் சேர்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை ஐஐடியில் பி எஸ் டேட்டா சயின்ஸ், பி எஸ் எலக்ட்ரானிக் ஆகிய பாடப்பிரிவுகள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படுகிறது. BScஇல் ஏரோஸ்பேஸ் ட்ரோன் (aerospace drone) படிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் ஆன்லைனில் கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளோம்" என்றார்.





















