AC maintenance : சுட்டெரிக்கும் வெயில் ... AC பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ் உங்களுக்காக...!
வெயில் காலத்தில் ஏசி-யை திறம்புற பயன்படுத்தவும், மின்சாரம் மிச்சப்படுத்தவும், ஏசி-யின் ஆயுளை நீடிக்கவும், முறையாக பராமரிப்பது அவசியம்.

கோடைக்காலத்தில், வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக பெரும்பாலானவர்கள் ஏ.சி. பயன்படுத்துவார்கள். சென்னை போன்ற வெப்பமான ஊர்களில் ஏசியின் தேவை இன்னும் அதிகம். ஆனால், இந்த விலை உயர்ந்த சாதனத்தை முறையாகப் பராமரித்தால் மட்டுமே அது நமக்கு நீண்ட காலத்திற்கு பயன் தரும். இல்லையென்றால், அடிக்கடி பழுது ஏற்பட்டும். எனவே, வெயில் காலத்தில் உங்கள் ஏசியை சிறப்பாகப் பராமரிக்க உதவும் சில வழிமுறைகள்..
முதலில், உங்கள் ஏசியின் ஃபில்டரை தவறாமல் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம். தூசி மற்றும் அழுக்கு ஃபில்டரில் படிந்துவிட்டால், ஏசியின் குளிர்ச்சி திறன் குறையும். மேலும், இது ஏசியின் உட்புற பாகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்வது அல்லது மாற்றுவது நல்லது. இது உங்கள் ஏசியின் ஆயுளை நீடிப்பதோடு மட்டுமல்லாமல், மின்சார பயன்பாட்டையும் குறைக்கும்.
ஏசியின் வெளிப்புற யூனிட்டைச் சுற்றி நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வெளிப்புற யூனிட்டைச் சுற்றி செடிகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இருந்தால், அவற்றை அகற்றி விடுங்கள்.
ஏனெனில், வெளிப்புற யூனிட்டிலிருந்து வெளியேறும் வெப்பம் சரியாக வெளியேறவில்லை என்றால், ஏசி அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது அதன் செயல்திறனை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதிக மின்சாரத்தையும் செலவழிக்கும்.
உங்கள் ஏசியின் கூலிங் காயில்கள் மற்றும் கன்டன்சர் காயில்களை வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு நிபுணரைக் கொண்டு சுத்தம் செய்வது நல்லது. இந்த பாகங்களில் படிந்திருக்கும் அழுக்கை நீக்குவது ஏசியின் குளிர்ச்சி திறனை அதிகரிக்கும். நீங்களே சுத்தம் செய்ய முயற்சிக்காமல், அனுபவம் உள்ள ஒருவரை அணுகுவது பாதுகாப்பானது.
உங்கள் ஏசியில் ஏதேனும் சத்தங்கள் கேட்டாலோ அல்லது சரியாக குளிர்ச்சி இல்லாமலோ இருந்தாலோ, உடனடியாக ஒரு மெக்கானிக்கை அணுக வேண்டும். சிறிய பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரி செய்துவிட்டால், பெரிய பழுதுகளைத் தவிர்க்கலாம். அலட்சியமாக இருந்தால், அதிக செலவு ஏற்பாடு, மேலும் அதிக பழுதுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெயில் காலம் முடிந்து ஏசியை பயன்படுத்தாத சமயங்களில், அதை ஒரு கவர் போட்டு மூடி வைப்பது நல்லது. இதனால் தூசி உள்ளே செல்வது தடுக்கப்படும். அடுத்த வெயில் காலத்திற்கு ஏசியை எடுக்கும்போது, அது சுத்தமாக இருக்கும்.
- இவைகளை முறையாகப் பின்பற்றினால், உங்கள் ஏசியை வெயில் காலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
- 150 சதுர அடி அறைக்கு 1.5 டன் திறன் கொண்ட ஏ.சி. தேவை. எனவே அறையின் அளவை கணக்கீடு செய்து ஏ.சி.யை தேர்வு செய்ய வேண்டும்.
- இரவு பகலாக ஏ.சி.யை பயன்படுத்தும்போது, அறையில் உள்ள கதவு, ஜன்னல்களை அடைத்து, திரைச்சீலைகளைக் கொண்டு மூடி பயன்படுத்த வேண்டும்.
- ஏ.சி. பொருத்தப்பட்ட அறையில், மேற்கூரையில் இயங்கும் மின்விசிறி பொருத்துவதைவிட, டேபிள் பேன் எனும் சுவற்றில் பொருத்தும் மின்விசிறி பயன்படுத்துவதே சிறந்தது.
- தண்ணீர் வடியும் குழாயை சரியான முறையில் வடிகாலோடு இணைக்க வேண்டும். வடிகுழாய் மேலும் கீழும் இருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் மீண்டும் ஏ.சி. இயந்திரத்துக்கே வந்து, அறைக்குள் கொட்டுவதற்கு வாய்ப்பு உண்டாகும்.
மின்சாரம் மிச்சப்படுத்த:
மாலை நேரத்தில், வீட்டில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து குளிர்ந்த காற்றை உள்ளே வர அனுமதிப்பதன் மூலம், அதிக நேரம் ஏ.சி.யை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது.