TN Rain : கனமழை... கனமழை.. கனமழை..! தமிழ்நாடு முழுவதும் கொட்டித் தீர்க்கும் மழை...! மக்கள் கடும் அவதி..
TN Rain : தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுகிறது. இது வலுப்பெற்ற காரணத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு தொடங்கிய கனமழை நள்ளிரவை கடந்து அதிகாலையிலும் பெய்தது. இடைவெளி இல்லாமல் பெய்து வரும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ரெட் அலர்ட் அதாவது அதிகனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.
அந்த மாவட்டங்கள் மட்டுமின்றி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர். திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, விருகம்பாக்கம், அமைந்தகரை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கிண்டி ஆகிய பகுதிகளிலும் மழை காலை முதல் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காலையில் பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் 11-ந் தேதி கனமழை பெய்யும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடப்பட்டதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி உள்பட 19 மாவட்டங்களில் இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், தருமபுரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளத்து.
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். நாளையும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், கோவை, திருப்பூர், திருப்பத்தூர், வேலூர். ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.