ரூ. 486 கோடி பிராஜெக்ட்! 570 கி.மீ! அடியோடு மாறப்போகும் 3,505 சாலைகள்! அடித்தளம் போட்ட சென்னை மாநகராட்சி!
சென்னை மாநகராட்சி ரூ.486 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ளது. ஆனால் அதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.

சென்னை மாநகராட்சி ரூ.486 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்பு திட்டத்தை வகுத்துள்ளது. ஆனால் அதில் சிக்கல்கள் நீடிக்கின்றன.
சென்னை மாநகராட்சி வரவிருக்கும் 2025-26 நிதியாண்டில் ரூ.486 கோடி மதிப்பில், 570 கி.மீ நீளமுள்ள 3,505 சாலைகளை மறுசீரமைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும், சாலைகளின் தரம் மோசமாக இருப்பதாகவும், அவை குண்டும் குழியுமாக இருப்பதாகவும் குடிமக்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.
சாலைப் பணிக்காக தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு நிதியத்தின் (TURIF) கீழ் ரூ.150 கோடியும், நகர்புர சாலை மேம்பாட்டு திட்டம் (NSMT) கீழ் ரூ.60 கோடியும் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 295 கி.மீ நீளமுள்ள 1,759 சாலைகளை ரூ.276 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தி புதுப்பிக்க வேண்டும். இதில் ரூ.180 கோடி கடன்கள்/மானியங்கள் மூலம் கிடைக்கும், மேலும் ரூ.96 கோடி முன்னுரிமை அடிப்படையில் கிரேட்டர் சென்னை மாநகராட்சி நிதியின் கீழ் எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-25 நிதியாண்டுகளுக்கு இடையில் ரு. 1,844.4 கோடி மதிப்பில் இலக்கு வைக்கப்பட்ட 16,062 சாலைகளில் 14,937 சாலைகளை கிரேட்டர் சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது. 82% பணிகளை நிறைவு செய்துள்ளது.
தரவுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் 313 கி.மீ தொலைவில் 1,640 சாலைகள் முடிக்கப்பட்டன. இது அந்த ஆண்டு திட்டமிடப்பட்ட சாலைகளில் 99% ஆகும். 2022-23 ஆம் ஆண்டில் 778 கி.மீ தொலைவில் 4,510 சாலைகள் முடிக்கப்பட்டன. இது அந்த ஆண்டில் 97% ஆகும். 2023-24 ஆம் ஆண்டில் 6,072 சாலைகள் (1,094.98 கி.மீ) (90%), மற்றும் 2024-25 ஆம் ஆண்டில், மார்ச் 5, இரவு 8 மணி நிலவரப்படி திட்டமிடப்பட்ட 3,273 சாலைகளில் 2,715 சாலைகள் (578.74 கி.மீ) முடிக்கப்பட்டன.
இந்நிலையில், வட சென்னையில் வசிக்கும் ஒருவர், எண்ணூரில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், மணலி பிரதான சாலை மற்றும் காந்தி இர்வின் சாலைக்கும் இதே நிலைதான் என்றும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து சென்னை மாநகராட்சியிடம் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும் ஒட்டுவேலை கூட செய்யப்படவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
மேலும், “ராயபுரத்தில் உள்ள ஏ.ஜே. காலனியின் 1வது, 2வது, 3வது மற்றும் 4வது தெருக்களில் உள்ள சாலைகள் இரண்டு வாரங்களுக்கு முன்புதான் முறையாகச் செப்பனிடப்படாமல் புதுப்பிக்கப்பட்டன. அவை 4வது குறுக்குத் தெருவில் உள்ள பழைய சாலையை விட மிக உயரமாக உள்ளன.
இதற்கிடையில், ஆறு மாதங்களுக்கு முன்பு தண்டையார்பேட்டையில் உள்ள கைல்சம் தெரு மற்றும் கேசவன் தெருவில் சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சாலைகள் மிகவும் சீரற்றதாக இருந்தது. சில இடங்களில் உயரம் அதிகமாகவும் சில இடங்களில் பள்ளமாகவும் இருந்தது. எனவே, சென்னை மாநகராட்சி அதை சரிசெய்தது. எனவே தார் ஊற்றுவதற்கு முன்பே சாலையின் உயரத்தை சரிபார்க்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
அதேபோல் மணலி மண்டலத்தில் உள்ள பர்மா நகரைச் சேர்ந்த மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில், பர்மா நகர் பிரதான சாலையின் ஒரு பகுதி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் இதுவரை பிற்றுமின் அகற்றப்படவில்லை என்றும், இதனால் சாலையில் வாகனம் ஓட்டும்போது மணல் புயலைக் கடந்து செல்வது போல் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
கோபாலபுரத்தில் உள்ள மற்றொரு பயணி, நியூ கல்லூரியில் இருந்து சத்யம் தியேட்டர் வரை உள்ள பீட்டர்ஸ் சாலை நல்ல நிலையில் உள்ளது என்றும், ஆனால் அதற்கு அப்பால் பல பள்ளங்கள் இருப்பதாகவும் கூறினார். “சர்வீஸ் சாலையும் மோசமாக சேதமடைந்துள்ளது. மீசல்பேட்டை சந்தையை இணைக்கும் பாலத்தில் உள்ள சாலையில் அக்டோபர் 2024 முதல் பள்ளங்கள் உள்ளன. அவை சென்னை மாநகராட்சியால் சரிபார்க்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
சாலையில் தரம் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் நடைபாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற பக்கவாட்டு விளிம்புகள் சரியாக அமைக்க வேண்டும் எனவும் சாலைகளின் முழு அகலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
சிறிய சேதங்கள் கண்டறியப்படும் போதெல்லாம் மொபைல் ஜெட் பேட்ச்வொர்க் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஒட்டுவேலை செய்யப்படுகிறது என சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கனமழையால் சாலை மேற்பரப்புகள் அரிக்கப்படுவதால் தொடர்ச்சியான சேதம் ஏற்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

