Watch Video: மயங்கிய அரசு பேருந்து ஓட்டுனர்.. நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள்.. பரபர காட்சிகள்..
அரசு பேருந்தில் பயணித்த 22 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து 22 பயணிகளுடன் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செந்தில் ராஜா என்ற ஓட்டுநர் இயக்கி வந்தார். பேருந்து சங்ககிரி அடுத்துள்ள வி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ஓட்டுனர் செந்தில் ராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். அப்பொழுதும் அவர் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளார். இருப்பினும் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சங்ககிரி - சேலம் பிரதான சாலையில் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. அரசு பேருந்தில் பயணித்த 22 பயணிகள் எந்த ஒரு காயமும் இன்றி மீட்கப்பட்டு மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை வழங்கி நிலையில் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு வந்த சங்ககிரி காவல்துறையினர் சாலையின் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அரசு பேருந்து ஓட்டுனருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பேருந்து விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.