ஆசிரியர்களுக்கு 3 மாத நிலுவை ஊதியத்தை வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நிலுவை இல்லாமல், விரைந்து சம்பளம் கிடைக்க, பள்ளிக் கல்விச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.
மூன்று மாத காலமாக ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
3 மாத சம்பள பாக்கி
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், மூன்று மாதங்களுக்கு முன்னர், நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றிய அலுவலர்கள், கட்டாய இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிதித்துறையின் வழியே செயல்படும், ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.எஸ்., இணையதளத்தில், இடம் மாற்றப்பட்டவர்கள் குறித்த தகவல்களை புதுப்பிக்க வேண்டிய பணிகள் தாமதமானதால், இடமாற்றம் பெற்ற ஊழியர்கள், கல்வி அலுவலர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு, சம்பளம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் 3,000க்கும் மேற்பட்டோர், மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து, தற்போது அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நிலுவை இல்லாமல், விரைந்து சம்பளம் கிடைக்க, பள்ளிக் கல்விச் செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியவை பின்வருமாறு:
அல்லல் படும் ஆசிரியர்கள்
கல்விச் செல்வத்தைப் போதிக்கும் உன்னதமான, தன்னலமற்ற பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இவர்களுக்கான ஊதியத்தை ஒவ்வொரு மாதமும் கடைசி பணி நாளன்று அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று தகவல் வந்துள்ளது. நிர்வாக முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றம் உள்ளிட்ட நடைமுறைகள் முழுமையாக நிறைவு பெறாததன் காரணமாக இந்த சூழல் அக்டோபர் மாதம் முதல் நிலவியது. இந்தச் சிக்கல் சில நாட்களில் முழுமையாக சரி செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களாகியும் இந்தப் பிரச்சனை முழுமையான முடிவுக்கு வரவில்லை என்பதும், இன்னும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மூன்று மாதங்களாக சம்பளம் பெறாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தற்போது தெரிய வருகிறது.
கோரிக்கைகளைத்தான் நிறைவேற்றவில்லை…
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளைத்தான் நிறைவேற்ற முடியவில்லை, அகவிலைப்படி உயர்வை உரிய நேரத்தில் தர முடியவில்லை என்றால், சம்பளத்தைகூட உரிய நேரத்தில் தர முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் 'திராவிட மாடல்' ஆட்சியின் இலட்சணம். பொதுவாக, நிர்வாக ரீதியான மாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதியம் உரிய தருணத்தில் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
கடும் கண்டனம்
ஊதியத்திற்காக இன்னும் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ, வாங்கிய கடனுக்கான வட்டி அதிகரித்துக் கொண்டே போகிறதே என்ற அச்சம் பாதிக்கப்பட்டோர் மத்தியில் நிலவுகிறது. மேற்படி நிலைமைக்கு காரணம் பள்ளிக் கல்வித் துறைக்கும், நிதித் துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாததுதான் என்று கூறப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு இருந்திருந்தால், மூன்று மாதங்களாக சம்பளம் பெற முடியாத சூழ்நிலை தவிர்க்கப்பட்டு இருக்கும். தி.மு.க. அரசினுடைய நிர்வாகத் திறமையின்மைக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் எதிர்பார்க்கின்றனர். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படாத அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் உடனடியாக சம்பளம் வழங்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிலைமை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.