”அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல; நீங்களும் தான்..” - ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆய்வு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி, பல்வேறு துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். பொருளாதார மேம்பாடு, வேளாண்மை, நீர்வள ஆதாரங்கள், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புர மேம்பாடு, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி உள்ளிட்டவற்றில் வளர்ச்சியினை விரைவுப் படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இந்த ஆய்வு கூட்டத்தில பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ”20 மாதத்தில் ஏராளமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுணக்கமோ, முடக்கமோ இருந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும். திட்டங்களில் ஏதேனும் தடங்கல் இருக்கலாம், உத்தரவு வரவேண்டியதாக இருக்கலாம், அதிகாரிகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி செயல்படுத்த வேண்டும். அறிவித்த திட்டங்கள் முடங்கி இருந்தால் துறை அதிகாரிகள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும். திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
”8 கோடி மக்களும் பாராட்டும் அரசு”
இதனை தொடர்ந்து பேசிய அவர், "மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் லட்சக்கணக்கான பெண்களின் பாராட்டுகளை அரசு பெற்று வருகிறது. காலை உணவு திட்டத்தால் பயனடைந்தோர் அரசை பாராட்டி வருகின்றனர். இதேபோல் அனைத்து திட்டங்களாலும் பயன்பெறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் எட்டுக் கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உயர்ந்துவிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மேலும், "அரசு என்பது முதலமைச்சர் மட்டுமல்ல. அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் என மூன்று பகுதிகளும் ஒருமுகப்பட்டு செயல்படுவதே நல்லாட்சி . எனக்கு இந்த காலகட்டமானது மன நிறைவு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிவித்துக் கொள்கிறேன். இதனை மேலும் வலுப்படுத்த வேண்டும்” என்றார்.
”புதிய திட்டங்களை அறிவிப்பது சாதனை அல்ல”
இதனை தொடர்ந்து பேசிய அவர், ”கடந்த பத்தாண்டு காலத்தில் ஒரு தொய்வு இருந்தது. 20 மாத காலத்தில் புதிய புதிய திட்டங்களை அறிவித்தது சாதனை அல்ல. அறிவிப்புகளை செயல்படுத்துவதை கண்காணிப்பதில் தான் முக்கிய வெற்றி உள்ளது. 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உள்ளது" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ”மள மளவென எழுந்து வருகிறது மதுரை கலைஞர் நூலகம். ஒவ்வொரு திட்டங்களையும், அறிவிப்புகளையும் ஆய்வு செய்ய வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் தடைகள் ஏற்படலாம். 2023ஆம் ஆண்டுக்குள் அனைத்துத் திட்டங்களும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்ற நிலை ஏற்பட வேண்டும். திட்டங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தாலே அந்தத் திட்டம் வெற்றிபெற்றுவிடும். அனைத்து திட்டங்களும் செயல்பட ஒன்றாக சேர்ந்து செயல்படுவோம்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.