தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தலைமை செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது முதல், அரசின் பல்வேறு துறைகளின் செயலாளரும், அதிகாரிகளும் மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக தலைமை செயலாளர் வெ. இறையன்பு இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, “அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறையின் செயலாளரான நசீமுதீன் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாறறப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் வாணிப கழகத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர்கள் தேர்வு வாரிய தலைவரான நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு, புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் அரசின் சிறப்பு செயலாளர் டி.என். வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ்., பணியிடம் மாற்றப்பட்டு அரசின் கரூவூலம் மற்றும் கணக்குகள் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் ஆணையர் எல். சுப்பிரமணியன் பணியிடம் மாற்றப்பட்டு தமிழ்நாடு மாநில வர்த்தக கழகத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட 21 துறைகளின் முதன்மை செயலாளர்கள் பணியிடம் மாற்றப்பட்டனர். அதற்கு முன்னதாக, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.