M.S. Swaminathan Dead: பசுமைப் புரட்சியின் தந்தை; வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்
பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் ஆராய்ச்சியாளரான, எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்.
வேளாண் துறையை சேர்ந்த விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன், தனது 98வது வயதில் காலாமானர்.
எம்.எஸ். சுவாமிநாதன் மரணம்:
வயது மூப்பு காரணமாக, சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1925ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பிறந்த எம்.எஸ். சுவாமிநாதன், அங்கு பள்ளிபடிப்பை முடித்தார். மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்பது அவரது இயற்பெயராகும். பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்ற அவர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியாவின் பசுமைப்புரட்சியை முன்னின்று நடத்திய எம்.எஸ். சுவாமிநாதன், சர்வதேச அளவில் புகழ் பெற்றார். வேளாந்துறை செயலாளர், மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகிய பதவிகளை அவர் வகித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வகித்துள்ளார்.
எம்.எஸ். சுவாமிநாதனின் சாதனைகளும், பதவிகளும்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக 1972ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை செயல்பட்டுள்ளார்.அரிசி தட்டுப்பாட்டை நீக்க நவீன வேளாண் அறிவியல் முறைகளை கண்டறிந்த பெருமை இவரையே சேரும். அதிக விளைச்சல் திறனுடன், நோய் தாக்குதல்கள் அற்ற அரிசி வகைகளை உருவாக்கியவர் சுவாமிநாதன் தான். உருளைக்கிழங்கு, கோதுமை, அரிசி மற்றும் கதிர்வீச்சு தாவரவியல் தொடர்பான ஆய்வுகளை இவர் மேற்கொண்டுள்ளார். பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IRRI) டைரக்டர் ஜெனரலாக அவர் தலைமை வகித்தார். க்வாஷ் மாநாடுகள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) தலைவராக இருந்துள்ளார்
எம்.எஸ். சுவாமிநாதனுக்கு கிடைத்த கவுரவம்:
1999ல் வெளியான டைம்ஸ் இதழின் சிறந்த 20 ஆசிரியர்கள் எனும் கவுரவத்திற்கு தேர்வான 3 ஆசிரியர்களில் இவரும் ஒருவர் ஆவார். பசுமைப் புரட்சியின் தந்தை எனவும் போற்றப்படும் இவர், சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை என ஐக்கிய நாடுகள் சபையா ல் பாரட்டப்பட்டவர் ஆவார். ஆசியாவின் நோபல் விருது என போற்றப்படும் மகசேசே விருதையும் அவர் பெற்றுள்ளார். பத்மவிபூஷன், எஸ்எஸ் பட்நாகர் உள்ளிட்ட விருதுகளையும், இந்திய மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஏராளமான கவுரவ டாகடர் பட்டங்களையும் பெற்றுள்ளார். அவருக்கு 1987 இல் முதல் உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது. இது நோபல் பரிசுக்கு இணையாக விவசாயத் துறையில் மிக உயர்ந்த கவுரவமாக அங்கீகரிக்கப்படுகிறது.
குடும்ப வாழ்க்கை:
MS சுவாமிநாதன் 1951ம் ஆண்டு கேம்பிரிட்ஜில் தன்னுடன் பயின்ற மீனா என்பவரை மணந்தார் . இந்த தம்பதிக்கு சௌமியா சுவாமிநாதன் (குழந்தை மருத்துவர்), மதுரா சுவாமிநாதன் (பொருளாதார நிபுணர்), மற்றும் நித்யா சுவாமிநாதன் (பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு) என மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களது குடும்பத்திற்குச் சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியை, வினோபாபாவேயின் பூமி தான இயக்கத்தின்படி நன்கொடையாக அளித்துள்ளார்