கண்ணை கட்டிக்கொண்டு 106 தேங்காய்.. மகளிர் தினத்தில் அசத்திய அரசுப்பள்ளி மாணவி..
கண்ணை கட்டிக்கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காயை உடைத்து மகளிர் தினத்தில் அசத்திய அரசு பள்ளி மாணவி..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த உள்ள மூனுகபட்டு கிராமத்தை சேர்ந்த கூலி நெசவு தொழிலாளி குமரன் அனிதா தம்பதியினருக்கு ஸ்ருதி வயது (13) காஞ்சனா வயது (10) என்ற 2 மகள்கள் உள்ளனர். மேலும் ஸ்ருதி அதே ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.
இந்நிலையில் மாணவி ஸ்ருதி உலக சாதனைசெய்ய ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணை துணியால் கட்டிக்கொண்டு சுமார் 36 கிலோ மீட்டர் சைக்கிள் இயக்கி அனைவரின் பாராட்டையும் பெற்று கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர்.
இதனையொடுத்து இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களால் எல்லாம் சாதிக்க முடியும் என்ற உணர்வை பெண்கள் மத்தியில் கொண்டு செல்ல புதிய முயற்சியை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ருதி தன்னுடைய கண்களில் துணியால் கட்டிக்கொண்டு தன்னுடைய சகோதரியான காஞ்சனாவை கீழே படுக்கவைத்து அவரை சுற்றியிலும் தேங்காயை வைத்து சகோதரியின் மீது பாடாமல் தேங்காய் உடைக்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று ஆரணி அருகே மூனுகபட்டு கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் செய்யாறு மாவட்ட கல்வி அலுவலர் நளினி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து பள்ளி வளாகத்தின் மேடையில் 8-ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ருதி தனது சகோதரியை படுக்க வைத்து சுற்றி தேங்காயை வைத்து தனது கண்ணை துணியால் கட்டி சுத்தியல் மூலம் 2 நிமிடங்களில் 106 தேங்காயை உடைத்து புதிய வரலாற்று உலக சாதனை நிகழ்த்தினார்.
இந்த சாதனையை பீனிக்ஸ் புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. மேலும் ஏற்கனவே கண்ணை கட்டிக்கொண்டு 50 தேங்காயை 1 நிமிடத்தில் உடைத்தாக இருந்த சாதனையை அரசுப்பள்ளி மாணவி ஸ்ருதி 2 நிமிடத்தில் 106 தேங்காயை உடைத்து புதிய சாதனை மைல் கல் எட்டியுள்ளார்.
இதனை பீனிக்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இடம் பதிந்து விருது வழங்கபட உள்ளதாக புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளன.
இதனையடுத்து புதிய சாதனை படைத்த அரசுப்பள்ளி மாணவிக்கு மாணவர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வாழ்த்து தெரிவித்தும் தலைமையாசிரியை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோர் கேடயம் வழங்கி மாணவி ஸ்ருதியை கௌரவப்படுத்தினார்கள்.
இதுகுறித்து பள்ளி மாணவி ஸ்ருதி பேசுகையில்.. நான் இதற்கு முன்பு கண்களை மூடிக்கொண்டு சைக்கிள் இயக்கி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தேன். மேலும் எனக்குள் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது, அப்போது எனக்கு பெண்களால் இந்த உலகில் சாதிக்க முடியாதது ஒன்றும் இல்லை என்ற எண்ணமும் பெண்களிடம் உள்ள பயத்தையும் போக்கும்விதமாக இன்று உலக பெண்கள் தினத்தன்று என்னுடைய தங்கையின் உதவியோடு தேங்காயை வைத்து தனது கருப்பு துணியால் கண்ணை கட்டி கொண்டு சுத்தியல் மூலம் 2 நிமிடங்களில் 106 தேங்காயை உடைத்து புதிய வரலாற்று உலக சாதனை படைத்தேன் என்று கூறினார்.