(Source: ECI/ABP News/ABP Majha)
EPS: மிக்ஜாம் புயல் தாக்கம்; மக்கள் பாதிப்பிற்கு தி.மு.க. அரசுதான் முழு பொறுப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு தி.மு.க. அரசுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம், வடசென்னையில் மூலக்கொத்தளம், மிண்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் இன்னமும் வடியாமல் உள்ளது.
முழு பொறுப்பு தி.மு.க.:
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ புயல் அடிக்கின்ற காலத்தில் மழை, கனமழை பெய்யும் என்று தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டது. அனைவரும் பார்த்தோம். ஆனால், இந்த விடியா தி.மு.க. அரசு இதை அலட்சியப்படுத்தியதால் சென்னை மாநகரில் வசிக்கும் மக்கள், சென்னை புறநகரில் வசிக்கும் மக்கள் இந்த கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழு பொறுப்பு தி.மு.க. அரசுதான்.
ராட்சத மோட்டார்கள்:
முன்கூட்டியே தகுந்த நடவடிக்கைகள் எடுத்திருந்தால் மக்கள் இந்தளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். அ.தி.மு.க. அரசு இருக்கும்போது, நான் முதலமைச்சராக இருந்தபோது பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒதுக்கப்பட்டு, அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அந்த மண்டலங்களுக்கு சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, அங்கிருக்கும் பகுதிகளில் வடிகால் பகுதிகளில் எங்கெல்லாம் தூர்வார வேண்டும்? எங்கெல்லாம் அடைப்புகளை அகற்ற வேண்டும்? என்று கணக்கெடுத்து உடனுக்குடன் தூர்வாரி அடைப்புகளை நீக்கிய காரணத்தால் மழைகாலத்தில் தண்ணீர் தேங்காமல் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.
மேலும், மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலமாக எங்கெல்லாம் தாழ்வான பகுதி இருக்கிறது? அந்த பகுதியில் தண்ணீர் தேங்கினால் அதை அகற்றுவதற்கு வேகமாக, துரிதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை அகற்றினோம். ஆனால், இந்த அரசு தலைமைச்செயலாளர் பேட்டியில் சொன்னார். மழை பெய்த பிறகுதான் மழைநீரை அகற்றுவதற்கு ராட்சத மோட்டாரை கேட்டோம் என்கிறார்.
மக்கள் பாதிப்பு:
அப்படி என்றால் இந்த அரசு எந்தளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காதது என்பது நிரூபணம் ஆகிறது. ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த கருத்தில், கனமழை பெய்யும் என்று தெரிந்தும் தேங்கிய இந்த அரசு எச்சரிக்கையுடன் செயல்பட்டு தேங்கிய நீரை அப்புறப்படுத்துவதற்கு ராட்சத மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருந்தால், குறுகிய காலத்தில் தண்ணீரை அகற்றியிருக்கலாம். மக்கள் பாதித்திருக்க மாட்டார்கள்.
2018, 2020, 2015ல் மின்சாரம் ஓரிரு நாளில் கொடுத்தோம். அ.தி.மு.க. அரசு இருந்தபோது பூமிக்கு அடியில் கேபிள் பதித்தோம். அப்படி இருந்தும் நேற்று வரை பலருக்கு மின்சாரம் அளிக்கவில்லை. 90 சதவீதம்தான் கொடுத்தோம் என்கிறார்கள். 200 இடங்களுக்கு மேல் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று பத்திரிகைகளில் பார்த்தேன். இது எல்லாம் இந்த அரசின் அலட்சியத்தின் காரணமாகவே மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனியாவது இந்த அரசு தேங்கிய நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அப்புறப்படுத்திய இடத்தில் சேறும், சகதியாக இருக்கிறது. அந்த இடத்தில் ப்ளிச்சீங் பவுடர் தூவ வேண்டும். தொற்றுநோய் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தி.மு.க. வீரவசனம்:
மழைநீர் தேங்கிய இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து, மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அமைக்க வேண்டும். இதையெல்லாம் இந்த அரசு செய்ய வேண்டும். சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது. அதை முறையாக பயன்படுத்த வேண்டும். எப்போ பாரு, 4 ஆயிரம் கோடியில் வடிகால் வசதி செய்திருக்கிறோம். 20 செ.மீட்டர் மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் நிற்காது என்றனர். இப்போது ஒரு சொட்டு தண்ணீர் நிற்கவில்லை. குளம்போல தண்ணீர் நிற்கிறது. எங்க பார்த்தாலும் தண்ணீர். இந்த விடியா தி.மு.க. அரசு வடிகால் வசதி திட்டம் எந்தளவில் இருக்கிறது? வடிகால் வசதி இருக்கிறதா? இது மக்கள் தெரிந்து கொள்வதற்காக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் எந்த காலத்தில் எந்த மழை பெய்தாலும் சென்னையில் தண்ணீர் தேங்காத அளவிற்கு வடிகால் வசதி செய்திருக்கிறோம் என்று வீரவசனம் பேசினார்கள். தண்ணீர் தேங்காத இடமே கிடையாது. எங்கள் கட்சி அலுவலகத்தில் கூட ஒன்றரை அடி தண்ணீர் நிற்கிறது.
சென்னையில் உள்ள 2 அமைச்சர்களும் தண்ணீர் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், ஊடகத்தில் மக்கள் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று பார்க்கிறோம். அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்களை அழைத்து தண்ணீர் அகற்றப்படாத பகுதியில் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.”
இவ்வாறு அவர் பேசினார்.