பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம் - ஐ.டி. ரெய்டுக்கு இபிஎஸ் கண்டனம்
எதிர்கட்சியினர் மீது நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் திசை திருப்பும் நாடகம் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். முன்னாள் அமைச்சர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு, சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு திமுக அரசு உதவி செய்தது. எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் புனைந்து பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். தி.மு.க. அமைச்சருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை திசை திருப்ப முயற்சி தான் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்கட்சியினர் மீது நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:
குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். குரங்கு, பூமாலையை புழுதியில் பிய்த்து எறியும்: கொள்ளிக்கட்டையால் தன் தலையையும் சொரியும், ஊரையும் எரிக்கும்.
அந்த குரங்கின் நிலையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள், திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, அல்லலுறும் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக வரிகளை விதித்தல், அம்மா அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா செய்தல் மற்றும் தங்களின் ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் எதிர்க்கட்சியினரின் குரல்வளைகளை நெரித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெண்களுக்கு எதிராக உரிமைத் தொகையினை வழங்காதது முதல் மாணவர்களின் கல்விக் கட்டணம் ரத்து வரை எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாத இந்த விடியா திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியது. தொடர்ந்து இப்போது மின் கட்டணத்தையும் வானளவு உயர்த்தியுள்ளது.
பெண்களுக்கான தாலிக்கு தங்கம், மகளிர் இருசக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய இந்த மக்கள் விரோத அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.
இதனால் கொதித்துப்போயுள்ள மக்களின் துயர் துடைக்க, வருகின்ற 16.09.2022 அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் கழக செயல்வீரர்கள் இந்த அறப் போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதைத் தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான, கழக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. S.P. வேலுமணி, M.L.A., மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் C. விஜயபாஸ்கர், M.LA. ஆகியோரது வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ற முறையில் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவல் துறையாக ஏவி விட்டுள்ளார்.
ஏற்கெனவே, இருவரது வீடுகளிலும் இரண்டுமுறை சோதனை நடத்தி வெறுங்கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்புத் துறையினர், மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அவர்கள் மீது இந்த விடியா திமுக அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது. வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாகக் கூறும் (இல்லாத) ஆதாரங்களை மாண்புமிகு உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது. இதில் இருந்தே அவர்கள் பொய்ப் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு புரிந்துள்ளது.
திராவிட அரசு, நேர்மையான அரசு என்று தங்களைத் தாங்களே மார்தட்டிக்கொள்ளும் இந்த விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுபட்டுள்ள திமுக அமைச்சரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்தத் தயாரா? முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள், இந்நாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அவர்கள் மீது தண்டனை வாங்கித் தருவாரா ? தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும், தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கத் தயாரா ?
தனது அமைச்சர்களைக் காப்பாற்ற நிலுவையில் உள்ள பல வழக்குகளை நடத்தாமல், அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்குவதைத் தடுக்காமல், யோக்கியம் பேசும்
இந்த முதலமைச்சர், எங்கள் ஆட்சியில் போடப்பட்ட, கையெழுத்திட்ட, நடைபெற்றுவந்த திட்டங்களுக்கு திறப்பு விழா காண்பதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலம் பழிவாங்கும் போக்கை கைவிட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
ஒருசில சுயநல சக்திகளோடு இணைந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா திமுக அரசு உதவி செய்தது. ஆனால், அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து, சதிகளை தவிடுபொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிநடை போட்டு வருவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த விடியா திமுக அரசு, மீண்டும் குறுக்கு வழியில் ஏவல் துறையின் உதவியோடு, கொங்கு மண்டல செயல்வீரர் திரு. எஸ்.பி. வேலுமணி அவர்களுடைய வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், கொரோனா காலத்தில் திறம்பட செயல்புரிந்து பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்ற சி. விஜயபாஸ்கர் அவர்களை முடக்கும் விதமாகவும், இன்று (13.9.2022) மூன்றாவது முறையாக தனது லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் சோதனையை மேற்கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப் போராடி வெல்வோம். எங்கள் மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை. திமுக மந்திரிகளைப் போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கப் பார்க்கமாட்டோம். காவல் துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியினரின் அடாவடித்தனத்திற்கு அடிபணியாமல் சட்டத்தின்படி, நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.