1967ம் ஆண்டு இதே நாள்! தமிழ்நாட்டில் திமுக முதன்முறையாக ஆட்சியமைத்த நாள் - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள் இன்று.
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 1967ம் ஆண்டு இதே நாளில் முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சியாக தேர்தலில் வென்று ஆட்சியமைத்தது.
மார்ச் 6!
— M.K.Stalin (@mkstalin) March 6, 2024
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த… pic.twitter.com/Svhmb5K9Vf
இதுகுறித்து தற்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மார்ச் 6!
இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்!
பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள்!
அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது.
மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம்!”என குறிப்பிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு:
நீதிக்கட்சியில் இருந்த தந்தை பெரியார் 1944ம் ஆண்டு திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை நிறுவினார். இந்த இயக்கத்தில் இருந்த பேரறிஞர் அண்ணாவுக்கும், பெரியாருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய அண்னா கடந்த 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
இந்த திராவிட முன்னேற்ற கழகமே தற்போது திமுக என்று அழைக்கப்பட்டு வருகிறது. திமுக கடந்த 1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு 1967ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட நிலையில், 138 இடங்களை வென்று மார்ச் 6ம் தேதியான இதே நாளில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தது.
அதன்பிறகு, திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சீர்த்திருத்தங்கள்:
- கடந்த 1968ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழி திட்டத்தை அறிவித்தார் அண்ணா.
- கடந்த 1968 ஜனவரி 3ம் ஆண்டு இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தினார் அண்ணா. அண்ணா அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமண பாதுகாப்புச் சட்டம் கடந்த 1968ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
- கடந்த 1969ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தார் அண்ணா.
- கடந்த 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அண்ணா மறைந்த பிறகு நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சராக பணியாற்றினார்.
- 1969ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி மு.கருணாநிதி தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று, 1971 ஜனவரி 31ம் தேதி கலைக்கப்படும் வரை அப்பதவியில் இருந்தார்.
- திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்ட கலைஞர் கருணாநிதி, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறையும் வரை அக்கட்சியின் தலைவராக இருந்தார்.
- அப்போது, செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கலைஞரின் மறைவுக்குபின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்று, தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சி புரிந்து வருகிறார்.