அய்யா இல்லை என்றால் நாம் யாரும் கிடையாது ! கண்கலங்கிய அன்புமணி... சொந்த ஊரில் நடந்தது என்ன ?
பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார் - அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த கிராமமான கீழ்சிவிரியில் தன்னுடைய குடும்பத்தினரோடு குலதெய்வ கோயிலில் வழிபாடு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கீழ்சிவிரி கிராமத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையின் திறப்பு விழா இன்று நடை பெற்றது. இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மற்றும் அவரது துணைவியார் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌமியா அன்புமணி ஆகியோர் முதலில் மரக்காணம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் திண்டிவனம் அருகில் உள்ள நல்லாவூர் கிராமத்திற்கு வருகை தந்தனர். அங்கு அமைந்துள்ள அவர்களது குலதெய்வக் கோவிலான ஸ்ரீ புஷ்கலை சமேத ஐயனாரப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொந்த ஊரான கிழ்சிவிரி கிராமத்திற்கு வருகை புரிந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது துணைவியார் சௌமியா அன்புமணி ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை திறந்து வைத்து அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் அவர்களது கிராம மக்களிடையே சிறப்புரை ஆற்றினர்.
பின்னர் கூட்டத்தினர் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்:
ஐயா இல்லை என்றால் நாம் யாரும் கிடையாது.. ஐயா ஒரு சமூக சீர்திருத்தவாதி.. சமூக நீதி என்றால் ஐயா.. சுற்றுச்சூழல் கல்வி வேலை வாய்ப்பு என பல விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக பாடுபட்டவர் மருத்துவர் அய்யா அவர்கள். பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான் மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார். நான் சிறுவயதில் இந்த ஊரில் உள்ள அனைத்து கிணறுகளில் குளித்து இருக்கிறேன் என பல்வேறு நினைவுகளை கூறி வந்த நிலையில் தீடிரென கண்கலங்கினார். பின்னர் கிராம மக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர். இந்திய தேர்தல் ஆணையம் விதிகளின்படி பாமகவின் தலைவராக 2026 ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்க எனக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார்கள் அந்த வழக்கு விசாரணை என்று நடைபெற்றது. ஆணையம் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பை கொடுத்துள்ளது எந்த பிரச்சனை இருந்தாலும் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறது. இதைத்தான் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிஆனந்த் வெங்கடேசன் அவர்களும் தெரிவித்து இருந்தார். எனவே பாமகவில் எந்த குழப்பமும் கிடையாது பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன் மாம்பழம் சின்னமும் என்னிடம் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த அங்கீகாரம் தொடரும். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நான் தான் பாமகவின் தலைவராக இருப்பேன். மற்றபடி நீதிமன்றத்தை அவர்கள் அணுகினால் நாங்கள் பதில் கொடுக்க தயாராக இருக்கிறோம். நீதிமன்றத்தில் மாம்பழம் சின்னம் சம்பந்தமாக எந்த விவாதமும் நடைபெறவில்லை.





















