Thoppur Skeletons: தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த எலும்புக்கூடு! பரபரப்பாகிய கிராமம்!
தொப்பூர் அருகே 5 வருடங்களாக பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டியில் எலும்புக் கூடுகள் இருந்ததால் பொது மக்கள் அதிர்ச்சியடைந்தானர்.
பயன்பாட்டுக்கு வராத நீர்த்தொட்டி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொப்பூர் ஊராட்சியில் செட்டி கோம்பை கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வந்துள்ளது. இந்த தொட்டியில் இருந்து வரும் குடிநீர் இப்பகுதி மக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கூடுதல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க கோரிக்கை விடுத்து விடுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2017- 18 ஆம் ஆண்டில் பொது நிதி திட்டத்தின் கீழ் சுமார் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்ட நாளிலிருந்து இதுவரை பைப்லைன் அமைக்கப்படாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.
எலும்புக்கூடுகள் :
பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து இன்று அப்பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மூடப்பட்டிருந்த மூடியை அப்பகுதி பொதுமக்கள் சிலர் திறந்து பார்த்த பொழுது நீர்தேக்க தொட்டியின் உள்ளே எலும்புக்கூடுகள் இருந்துள்ளது. இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொட்டியில் இறங்குவதற்கு படிகள், ஏணிகள் உள்ளிட்ட எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால் மூடப்பட்டிருந்த தொட்டியில் இருக்கும் எலும்புக் கூடுகள் ஏதேனும் மனித உடலா? அல்லது விலங்குகளின் உடலா? என்பது தெரியாமல் மிகுந்த அச்சமடைந்தனர்.
நிபுணர்கள் ஆய்வு:
இதுகுறித்து தொப்பூர் காவல்துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர், எலும்பு கூடு எடுத்து, மனித எலும்பா அல்லது வேற ஏதேனும் விலங்குகளின் எலும்பா என கண்டறிய மருத்துவ குழுவினர் மற்றும் தடயவியல் நிபுணர்களை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உள்ளே இறங்கி எலும்பு கூடுகளை எடுத்தனர். இதில் கைப்பற்றப்பட்ட எலும்பு கூடுகளை மருத்துவ குழுவினர், ஆய்வகத்தில் சோதனை செய்தனர்.
சோதனையில் கண்டுபிடிப்பு:
இந்த சோதனையில், மூடப்பட்டிருந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த எலும்புக்கூடுகள், குரங்கின் எலும்புக் கூடு என தெரியவந்தது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறிய குரங்கு, தவறி உள்ளே விழுந்து, மேலே ஏற முடியாமல், உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் எலும்புக் கூடு இருந்ததால், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்