கண்ணகி முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் தண்டணை குற்றவாளிகள் சிறையில் அடைப்பு
’’கண்ணகி முருகேசன் கொலை வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது’’
கடலூர், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியில் வசிக்கும் சாமிகண்ணு என்பவரின் மகன் முருகேசன் பொறியியல் பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி (22) என்பவரை காதலித்து வந்தார் . இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர் . எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே , முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக 2003ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர் .
இந்த சம்பவத்தில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது. இந்த வழக்கு கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது 2017 செப்டம்பர் 11ஆம் தேதி வரை தினமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த விசாரணை நடைபெற்றது.
பின் சிறப்பு நீதிபதி உத்தமராசா தனது தீர்ப்பில், முக்கிய குற்றவாளியான கண்ணகியின் அண்ணன் மருதபாண்டியனை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்றும், 4 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். மேலும் இந்த தூக்கு தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் மூலம் உறுதி செய்யப்பட்ட பிறகு, நிறைவேற்றப்படும் என்றார். தொடர்ந்து கண்ணகியின் தந்தை துரைசாமி, உறவினர்கள் ரங்கசாமி (45), கந்தவேலு (54), ஜோதி (53), வெங்கடேசன் (55), மணி (66), தனவேல் (49), அஞ்சாப்புலி (47), ராமதாஸ் (52), சின்னதுரை (62) ஆகியோருக்கு கொலை மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆயுள் தண்டனையும், வழங்கி உத்தரவிட்டார். பின் குற்றவாளிகள் அனைவரும் கடலூர் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இவ்வழக்கு தொடர்பாக கடலூர் கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட செல்லமுத்து, துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும், சப்&இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன், இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற நிலையில் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. காதல் ஜோடி ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் கோர்ட்டு விவசாயிக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்த தீர்ப்பு அனைவராலும் பாரட்டக்கூடிய தீர்ப்பாக அமைந்துள்ளது.