மதுபானம் வாங்க முண்டியடிப்பு; மிலிட்ரி கேண்டினுக்கு ‛சீல்’ வைப்பு
கொரோனா விதிமுறை பின்பற்றப்படவில்லை எனக்கூறி கேண்டினை அதிகாரிகள் சீல் வைத்ததால், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும்-அதிகாரிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் புதுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மிலிட்டிரி கேன்டினில் கொரோனா நடத்தை வழிமுறைகளை பின்பற்றாமல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுபானங்கள் வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் குடும்பத்தினர் மட்டும் பயன்பெறும் வகையில் கேன்டீன்கள் தமிழ்நாட்டில் ஓவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரூர் கேன்டீனில் இன்று காலை முதல் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் சொந்த பயன்பாடுகளுக்காக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து, 500க்கும் மேற்பட்டோர் மதுப்பிரியர்கள் ஒரே நேரத்தில் கூட அரம்பித்தனர்.
மிலிட்டரி கேன்டினில் கொரோனா நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற செய்தி கடலூர் வருவாய்த்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்த வருவாய்த்துறை அதிகாரிகள், "மதுபானம் வாங்க வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கட்டாயம் 6 அடி சமூக இடைவெளி இருக்கவேண்டும்" என கேன்டின் நிர்வாகத்திடமும், கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தவர்களிடமும் அறிவுரைகள் வழங்கினர். தொற்று பரவும் அபாயம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக் கொண்டால் மிலிட்டரி கேன்டீனுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இருப்பினும், மதுபாட்டில்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முழு முனைப்புடன் இருந்த மதுப்பிரியர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கைகளை காற்றில் பறக்க விட்டனர். 6 அடி சமூக இடைவெளி இல்லாமலும்,முகக்கவசம் ஒழுங்காக அணியாமலும் கூட்டமாக இருந்தால், மிலிட்டரி கேன்டீனுக்கு அதிகாரிகள் உடனடியாக சீல் வைத்தனர்.
இதனையடுத்து, அரசு அதிகாரிகளுக்கும், மது பாட்டில்கள் வாங்க வந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், வட்டாட்சியர் பலராமன் நடத்திய பேச்சுவார்ததையின் மூலம் டோக்கன்கள் மூலம் மட்டுமே மதுபாட்டில்கள் வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. டோக்கன் பெற்ற நபர் வரிசையில் உரிய இடத்தில் நின்று, முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளி கடைப்பிடித்து மதுபாட்டில்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். மதுபானம் வாங்கிச் செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து மிலிட்டரி கேன்டினுக்கு வைக்கப்பட சீல் அகற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம்:
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 28ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மேலும், மாவட்டங்கள் 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கடலூர் மாவட்டம் கொரோனா தொற்று உறுதி விகிதம் குறைந்து காணப்படும் இரண்டாவது வகை மாவட்டத்தில் உள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படும் 27 மாவட்டங்களில் வரும் ஜூன் 14 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் இயங்க அனுமதி அளித்தது. மதுபான சில்லறை விற்பனைக் கடை பணியாளர்களில் உடல் தகுதி வாய்ந்த (medically fit person and without any co-morbid condition) 55 வயதிற்கு கீழுள்ள அனைத்து பணியாளர்களும் பணியில் இருக்கவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.