Coonoor Chopper Crash: ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
குன்னூர் ஹெலிகாப்டர் விஅத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளானது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர்.
அதில், முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி முதுலிகா ராவத், ராணுவ வீரர்கள் லிட்டெர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவாக் சிங், ஜிதேந்தர் குமார், விவேக் குமார், சாய் தேஜா, சாத்பால், சவுஹான், குல்தீப், பிரதீப், தாஸ் ஆகிய 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் மட்டும் மருத்துவமனையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இதனிடையே விபத்துக்கான காரணமாக வானிலையும் தொழில்நுட்ப கோளாறும் சொல்லப்படுகிறது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்காது என விமானத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கறுப்புப்பெட்டி கிடைத்தால் தான் விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும் என கூறிவந்த நிலையில், கறுப்பு பெட்டி கண்டறியப்பட்டு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதனால் உண்மை வெளிவரும் வரை யூகம் செய்யாதீர்கள் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உண்மையை கண்டறியும்வரை யூகம் செய்யாதீர்கள். விரிவான விசாரணை நடத்தி விரைவாக உண்மைகள் வெளியிடப்படும். இறந்தவர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும்வகையில் யூகங்களை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் குறித்தும் அவதூறான செய்திகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக ஆங்காங்கே சிலர் கைது செய்ய்ப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பட்டு வருகிறது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.