Special Bus: 4 நாட்கள் தொடர் விடுமுறை; சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள் - நிரம்பி வழியும் பேருந்துகள், ரயில்கள்
Special Bus: தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
Special Bus: தொடர் விடுமுறை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
தொடர் விடுமுறை:
இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை. அதைத்தொடர்ந்து நவராத்திரி மற்றும் விஜயதசமியை ஒட்டி வரும் செவ்வாய்க்கிழமை விடுமுறை என்பதால், அடுத்த 4 நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
நிரம்பி வழியும் பேருந்து நிலையங்கள்:
கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து மாலை முதல் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. சொந்த ஊர்கள், ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்ப்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பலர் குடும்பத்துடன் பயணம் செய்வதையும் காண முடிந்தது. அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி பல தனியார் பேருந்துகளிலும் பொதுமக்கள் பயணம் செய்தனர்.
தனியார் பேருந்துகளில் சென்னையில் இருந்து நேற்று ஒரே நாளில், 1280 பேருந்துகளில் 51 ஆயிரத்து 200 பயணிகள் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர். இதேபோன்று இன்று 1620 பேருந்துகளில் 65 ஆயிரம் பேர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ரயில்களை ஆக்கிரமித்த வடமாநில பயணிகள்:
மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்காக தமிழக மக்கள் பேருந்து நிலையங்களை முற்றுகையிட்டனர். மறுமுனையில் நவராத்திரியை முன்னிட்டு வடமாநிலங்களில் தசரா விழா விமரிசையாக கொண்டாடப்படும். அதனை காண்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள வடமாநில மக்கள், ரயில்களில் அதிகளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தது. கோவை மற்றும் திருவனந்தபுரம் வழியாக செல்லும் ரயில்களும் பயணிகளால் நிரம்பி காணப்பட்டன. எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரயில்களிலும் அனைத்து வகுப்புகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
தொடர்ந்து அதிகரிக்கும் கூட்டம்:
மாலை தொடங்கி அடுத்த சில மணி நேரங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என கருதப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளையும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய வாய்ப்புள்ளதால், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக பேருந்து நிலையங்கள்:
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் செல்ல வாய்ப்புள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்க்க தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
- அதன்படி, தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போளூர், சேத்பட்டு. வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகர போக்குவரத்து கழக பூவிருந்தவல்லி பணிமனை அருகில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு. திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
- மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.