Tamilnadu MP Fund: தமிழக எம்.பிக்களே என்ன பிரச்சினை உங்களுக்கு? வீணாய் போகும் தொகுதி நிதி..! வாக்களிப்பது வீணா?
கடந்த நிதியாண்டில் தமிழக நாடாளுமன்ற தொகுதிகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 38% செலவே செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நிதியாண்டில் தமிழக நாடாளுமன்ற தொகுதிகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 38% செலவே செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி வளர்ச்சி நிதி:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி வளர்ச்சி நிதியாக ஒவ்வொரு நிதியாண்டிற்கும் 5 கோடி ரூபாய் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிதியை தங்கள் தொகுதியில் உள்ள பிரச்னைகளை தீர்க்க, மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரம், தற்போதுள்ள இளையராஜா போன்ற நியமன உறுப்பினர்கள், எந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிக்காவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செலவிடப்படாத ரூ.1,578 கோடி:
இந்நிலையில் கடந்த 2022-23ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வளர்ச்சி நிதியாக, 3 965 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த நிதியில், 2 ஆயிரத்து 387 கோடி ரூபாய் மட்டுமே கடந்த மார்ச் 30ம் தேதி வரையில் செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆயிரத்து 578 கோடி ரூபாய் செலவே செய்யப்படவில்லை. அதாவது மத்திய அரசிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த தொகையை கேட்டே பெறவில்லை. தொகுதியை மேம்படுத்துவதற்கு என மத்திய அரசே நிதி ஒதுக்கி கொடுத்திருந்தாலும், அதை முறையே பயன்படுத்தாது அதிர்ச்சி அளிக்கிறது.
யாருக்கு முதலிடம்:
நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியை பயன்படுத்தாத மாநிலங்களில் இமாச்சல பிரதேசம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, 48.6% எம்.பிக்கள் தங்களது தொகுதி வளர்ச்சிக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தவே இல்லை. அதைதொடர்ந்து, இரண்டாவது இடத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் 41 சதவிகித எம்.பிக்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 38.9 சதவிகித எம்.பிக்களும் தங்களது தொகுதி வளர்ச்சிக்கான நிதியை முழுமையாக பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
வீணாய்போன 170 கோடி:
மக்களவை உறுப்பினர்கள் 39 பேர், மாநிலங்களை உறுப்பினர்கள் 18 பேர் என தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கடந்த நிதியாண்டில் 285 கோடி ரூபாய் தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 111 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 174 கோடி ரூபாய் செலவே செய்யப்படவில்லை. அந்த நிதியானது மத்திய அரசின் கஜானாவில் வீணாய் இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிரச்னைகளே இல்லையா?
தமிழகத்தில் முறையான சாலை, போக்குவரத்து, குடிநீர், கல்வி, மின்சாரம், மருத்துவம் மற்றும் விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் எத்தனையோ மக்கள் தவித்து வருகின்றனர். பல மலைகிராமங்களில் போதிய சாலை வசதிகள் இல்லாததால், அவசர காலத்தில் விரைந்து மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. டோலி கட்டி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் அவலநிலையை கூட நம்மால் காணமுடிகிறது. இதுபோன்ற எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியடையாமல் தமிழக மக்கள் தவித்து வர, அதற்கென மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை கூட தமிழகத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் பயன்படுத்தாமல் வீணடித்துள்ளனர் என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.