பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து - கரூரில் 4 இளைஞர்கள் கைது
கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீது அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின், மாநில பொருளாளர் கரூரை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் சிவா, சங்கர், தமிழரசன் ஆகிய 4 இளைஞர்கள் இன்று காலை பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு நபர்கள் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்களும் தற்போது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1க்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அம்பிகா சரமாரி கேள்வி கேட்டார். கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன? உண்மை எது என்று தெரியாமல் எதற்காக போராட்டம்? இளைஞர்கள் சமுதாயம் எதை நோக்கி செல்கிறது? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா? மாணவர்களின் சக்தியை தவறாக பயன்படுத்த வேண்டாம்.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, நீதி கேட்டு போராட்டம் நடத்துவதாக அழைப்பு விடுத்திருந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி சரமரியாக கேள்வி கேட்டபின், 4 பேருக்கும் நீதிமன்ற நடுவர் அம்பிகா நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
தினமும் மாலையில் காவல் இடத்தில் கையெழுத்து போட வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக புலன்விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராட தூண்டவோ, போராட்டத்தை நடத்தவோ கூடாது என பிரமான பத்திரம் தாக்கல் செய்ய 4 பேருக்கும் நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்