CM Stalin: "தமிழக அரசின் இலக்கும், நோக்கமும் இது தான்.." முதலமைச்சர் ஸ்டாலின் லட்சியம் என்ன தெரியுமா..?
தேசிய அளவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு தேர்வானது, மகிழ்ச்சியுடன் பெருமையை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் மாநிலங்களின் வளர்ச்சி தொடர்பாக மருத்துவம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட 12 பிரிவுகளின் அடிப்படையில் இந்தியா டுடே நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவில் நாட்டின் சிறந்த மாநிலமாக தமிழகம் முதலிடத்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில், அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆய்வு நடத்தப்பட்ட மொத்தமுள்ள 12 பிரிவுகளில் 9ல் முதல் ஐந்து இடங்களிலும், மற்ற 3 பிரிவுகளில் முதல் 3 இடங்களிலும் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மொத்த வளர்ச்சியை விளக்கும் விதமாக ஆய்வின் மூலம் கிடைத்த புள்ளி விவரங்கள் உள்ளன. பொருளாதாரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் சட்ட & ஒழுங்கு ஆகிய முக்கிய துறைகளில், தமிழகம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவது, போன்ற பெரும் இலக்குகளை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்து இருப்பதாகவும் பாராட்டப்பட்டது.
”பெருமையும், மகிழ்ச்சியும்”
இந்நிலையில் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், தமிழகம் சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த முறை நாட்டின் நம்பர் ஒன் முதலமைச்சர் என அறிவிக்கப்பட்டபோது, நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதை காட்டிலும், தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக வருவதே தனது விருப்பம் என கூறினேன். தற்போது அது நிறைவேறி இருப்பதால் மகிழ்ச்சியுடன் பெருமைப்படுகிறேன். எனது பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய இந்த ஆய்வு முடிவுகள் என்னை ஊக்கப்படுத்துகிறது என முதலமைச்சர் கூறினார்.
வெற்றிக்கான மந்திரம்:
மக்களோடு மக்களாக இருந்து, மக்களின் பிரச்னைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்பதே அறிஞர் அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுத்தது. அதையே கலைஞர் கருணாநிதி செய்தார், அந்த வழியிலேயே தற்போது திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுவே எங்களின் வெற்றிக்கான மந்திரம் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
திமுக ஆட்சியில் எதற்கு முக்கியத்துவம்:
தமிழகத்தை சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றீர் என கேட்கப்பட்ட கேள்விக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிக் கொண்டிருந்தது. தேர்தல் முடிவுகள் வெளியானதும் அரசு அதிகாரிகள் தன்னை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வந்தபோதே, அவர்களுடன் தொற்று பரவலை தடுப்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டங்களை நடத்த தொடங்கிவிட்டேன்.
ஆட்சி பொறுப்பேற்றதும், தான் உட்பட அனைவருமே சுகாதாரத்துறை அமைச்சராக மாறி, செயல்பட்டதன் மூலமாகவே தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும், ஆட்சி காலம் முடிவடைவதற்குள் நிறைவேற்றப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார்.
தி.மு.க.வின் இலக்கு என்ன?
ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அதில் உங்களுடைய இலக்கு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, நடுத்தர வர்க்கம் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வேறுபாடு இன்றி, அனைத்து தரப்பினருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக பதிலளித்துள்ளார். சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, அதன் அடிப்படையிலேயே திமுக ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார்.
ஆரோக்கியத்தின் ரகசியம்:
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்ற கேள்விக்கு, சிறு வயது முதலே விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவேன். அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முதலைமைச்சர் ஆன பிறகும் கூட, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகிறேன். உணவு கட்டுப்பாட்டையும் தொடர்ந்து பின்பற்றுகிறேன். பசியோடு உட்கார்ந்து, பசியோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வைரமுத்துவின் வரிகளை பின்பற்றுவதன் மூலம், தான் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நம்புவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.





















