TN Govt Pension: இனி கடைசி ஊதியத்தில் 50% பென்ஷனாக வழங்கப்படும் - ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்
TN Govt TAPS Pension Scheme: மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவிகிதம் இனி, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TN Govt TAPS Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் பலன்களை வழங்கக் கூடிய, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்:
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசு அலுவலர்களின் நலன் மற்றும் எதிர்பார்ப்புகள், மாநிலத்தின் நிதிநிலை, எதிர்காலத்தில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வித தடைகளுமின்றி முறையாக ஊதியமும், ஓய்வூதியமும் கிடைக்கச் செய்யவேண்டிய பொறுப்பு போன்ற பல அம்சங்களை சீர்தூக்கிப் பார்த்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைத்து வந்த ஓய்வூதியம் மற்றும் பல்வேறு பலன்களைத் தொடர்ந்து அளிக்கக்கூடிய புதிய திட்டமாக “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட (Tamil Nadu Assured Pension Scheme TAPS)" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள்:
- மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்
- 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
- ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்
- அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்
- புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்
- பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
ரூ.13 ஆயிரம் கோடி கூடுதல் செலவு:
மேற்கூறிய TAPS திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு 13 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 01.01.2004-லிருந்து அரசு பணியில் சேர்ந்தர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டமும், அதற்கு முன்பாக அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.




















