Cm Relief Fund : புதுக்கோட்டையில் ஜல்லிக்காட்டு காளை முட்டி இளைஞர் பலி... முதலமைச்சர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடு பிடி வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடு பிடி வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீரனூர் சரகம், சீமானூர் கிராமத்தில் 23-4-2023 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த், த/பெ.ஆறுமுகம் (வயது 21) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டியதில் உயிரிழந்தார் என்ற செய்தியினை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.”
ஜல்லிக்கட்டுப் போட்டி
சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் கோலாகளமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த சீமானூர் பூமாலை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா நடந்தது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு, தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் போட்டியின்போது வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று, மைதானத்திற்குள் மாடு பிடிப்பதற்காக நின்றுகொண்டு இருந்த வீரரை கொம்பால் குத்தி தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அந்த வீரர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால் அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த வீரர் 21 வயதே ஆன ஜெயந்த் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
மேலும் படிக்க