Flashback: மறக்க முடியுமா.... பாப்பாபட்டி? 2006ல் அங்கு நடந்தது என்ன? முதல்வர் ‛டிக்’ செய்ய காரணம் இது தான்!
Pappapatti: ‛இத்தனை ஆண்டுகள் ஒரு ஊராட்சியில் தேர்தல் நடத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு..’ என முதல்வர் கருணாநிதி வருந்தியதை, சீரியஸாக எடுத்துக் கொண்டார் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின்.
கிராம மக்கள் சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என்பது ஒரு தகவல். அவர் பாப்பாபட்டி கிராம மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்கிறார் என்பது மற்றொரு தகவல். சென்னைக்கும் மதுரைக்கும் குறிப்பாக பாப்பாபட்டிக்கும் என்ன தொடர்பு? ஏன் பாப்பாபட்டியை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தார்? பாப்பாபட்டி அவ்வளவு எளிதில் மறக்கும் கிராமமா? இப்படி புதிர்கள் இந்த தகவலின் பின்னணியில் உலாவருகின்றன. இதோ அவற்றிக்கெல்லாம் விடை தருகிறது ஏபிபி நாடு....!
கேலிக்கூத்தான பாப்பாபட்டி தேர்தல்!
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கடைகோடி கிராமம் பாப்பாபட்டி. வெறுமனே பாப்பாபட்டி என்று கூறினால், பலருக்கு நியாபகம் வராது. பாப்பாபட்டி-கீரிபட்டி-நாட்டார்மங்களம் என்று சொன்னால் 90ஸ் கிட்ஸ்களுக்கு கொஞ்சம் நினைவு வரலாம். அந்த அளவிற்கு அங்கு சில கசப்பான சம்பவங்கள் அரங்கேறின. மற்றதை விட்டு, பாப்பாபட்டிக்கு வருவோம். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் கிராமம் அது. ஆனால் அந்த கிராமத்தை தலித் மக்கள் போட்டியிடும் தனி ஊராட்சியாக அறிவித்ததால், அங்கு ஆரம்பமானது பிரச்சினை.
பொதுப்பிரிவினர் அதை ஏற்க மறுத்ததால், அதன் பின் பாப்பாபட்டி ஊராட்சி தேர்தல், வேடிக்கையானது. தேர்தலை புறக்கணிப்பது, அதையும் மீறி தேர்தல் நடந்து தலித் தலைவர் பொறுப்பேற்றால் அவரை செயல்படவிடாமல் தடுத்து, அவரே ராஜினாமா செய்வது, 6 மாதத்திற்கு ஒரு தேர்தல், பின்னர் மீண்டும் தேர்தல் ரத்து என இப்படியே தான் சில ஆண்டுகளை கடந்தது பாப்பாபட்டி. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு பிரச்சாரம். ஒட்டுமொத்த அதிகாரிகள் படையோடு எடுத்த முயற்சிகள் எல்லாமே அங்கு பலனளிக்கவில்லை.
மதுரை கலெக்டர் உதயச்சந்திரனின் முயற்சி!
2000ம் ஆண்டில் பாப்பாபட்டி ஊராட்சி தேர்தல் பிரச்சனை உச்சம் பெற்றது. குறிப்பிட்ட ஒரு பிரிவினர், தனி ஊராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது ஊராட்சியாக பாப்பாபட்டியை அறிவிக்க வேண்டும் என உறுதியாக நின்றனர். 2006ம் ஆண்டு வரை இந்த பிரச்சனையை யாரும் தீர்க்க முடியவில்லை. ஒருபுறம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தேர்தலை நடத்த ஊர்வலம் செல்வேன் என்றார், மற்றொரு புறம் பொது ஊராட்சியாக அறிவிக்கவில்லை என்றால் நாங்களும் ஊர்வலம் செல்வோம் என மூவேந்தர் முன்னேற்ற கழகம் பிரேம்குமார் வாண்டையார் அறிவித்தார். இந்த நிலையில் தான் மதுரையின் ஆட்சியராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றார்.
இன்று முதல்வரின் தனிச்செயலாளராக உள்ள அதே உதயச்சந்திரன் ஐஏஎஸ் தான். அவர் தான் 2006ல் எப்படியாவது பாப்பாபட்டில கீரிப்பட்டி, நாட்டார்மங்களத்தில் ஊராட்சி தலைவர் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார். அப்போது திமுக ஆட்சி. முதல்வராக கருணாநிதி இருந்தார். பாப்பாபட்டி-கீரிப்பட்டி-நாட்டார்மங்களம் கிராமங்களில் எப்படியாவது தேர்தல் நடத்திட வேண்டும் என்பதில் கருணாநிதியும் ஆர்வமாக இருந்தார். அதன் அடிப்படையில் தான் உதயச்சந்திரனும் கிராம மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையை தொடங்கினார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் முயற்சி!
ஒரு ஊராட்சியை சமரசம் செய்வதே சவாலான விசயம். மூன்று ஊராட்சிகளை அங்குள்ள மக்களை சமரசம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அது உதயச்சந்திரனுக்கு சவாலாக இருந்ததாக தெரியவில்லை. அவர் போகிற போக்கில் அந்த பிரச்சினையை தீர்த்தார். எந்த தகராறும் இல்லாமல், ஒருமித்த கருத்தோடு தேர்தலை அங்கு நடத்த உதயச்சந்திரன் சில முன்னெடுப்புகளை எடுத்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அரைகுறை ஜனநாயக கடமை நடந்து வந்த பாப்பாபட்டியில், 2006ல் முதன்முறையாக பிரச்சினை இல்லாத தேர்தல் நடைபெற்றது. அதுவும் அனைவரின் சம்மதத்தோடு.
அதன் பின்னணியில் இருந்தவர் அன்றைய ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின். ‛இத்தனை ஆண்டுகள் ஒரு ஊராட்சியில் தேர்தல் நடத்தாமல் இருப்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு..’ என முதல்வர் கருணாநிதி வருந்தியதை, சீரியஸாக எடுத்துக் கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், அங்கு எப்படியாவது தேர்தலை நடத்த அதிகாரிகளை வேகப்படுத்தினார். அதன் விளைவு தான் பாப்பாபட்டி உள்ளிட்ட தடைபட்ட ஊராட்சிகளின் தேர்தல்கள் 2006ல் நடந்தது. இன்று வரை அங்கு நடந்து வருகிறது.
பாப்பாபட்டியை தேர்வு செய்ய காரணம் இது தான்!
சரி, இப்போது தான் பிரச்சினை இல்லையே... கிராம சபை கூட்டத்திற்கு பாப்பா பட்டியை தேர்வு செய்ய காரணம் என்ன? அதற்கும் காரணம் இருக்கிறது. தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கிவிட்டார். காரசாரமாக திமுகவை பிரசாரத்தில் சாடி வருகிறார். ‛உள்ளாட்சி தேர்தலை திமுக சரிவர நடத்தாது... அடாவாடி செய்யும்...’ என்பது தான் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசாரம். அதற்கு பதிலடி தரும் விதமாகத்தான் பாப்பாபட்டியை தேர்வு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ‛தேர்தல் நடைபெறாத, சட்டம் ஒழுங்கிற்கு பாதகமாக இருந்த ஊராட்சிகளில் அமைதியாக தேர்தலை நடத்தி ஜனநாயக கடமையாற்றியது திமுக அரசு...’ என்பதை நினைவூட்டவே அங்கு பயணிக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக கையில் எடுக்கும் ஒரே அஸ்திரமாகவும் அதுவே இருக்கும். அன்று அப்பிரச்சினையை தனியாளாக சமாளித்த மதுரை கலெக்டர் உதயச்சந்திரன் தான், தற்போது முதல்வரின் ஆலோசகர். எனவே அவரும் உடன் இருப்பார். இதனால் பாப்பாபட்டி தேர்வு பொருத்தமாக இருக்கும் என முதல்வர் அதை டிக் செய்திருக்கிறார்.
எப்படி இருக்கிறது பாப்பாபட்டி...?
பாப்பாபட்டியில் கிராம சபைக்கூட்டம்... அதில் முதல்வர் பங்கேற்கிறார் என்றதும் அந்த கிராமத்தில் பரபரப்பு தொற்றியுள்ளது. அது குறித்து தற்போது அந்த ஊராட்சியின் தலைவர் முருகானந்தத்தை தொடர்பு கொண்டு ஏபிபி சார்பில் பேசினோம். அவர் கூறியது...
‛‛சார்... முன்ன மாதிரி இப்போது இங்கே எந்த பிரச்சனையும் இல்லை... போன முறையும் நான் தான் ஊராட்சி தலைவர். இந்த முறையும் நான் தான் தலைவர். போன முறை 5 பேர் போட்டி போட்டாங்க. இந்த முறை யாரும் போட்டி போடாததால், நானே தலைவராக அன்னபோஸ்ட் முறையில் தேர்வானேன். நிர்வாகம் பண்றதில எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. முதல்வர் வருவதாக சொல்லி, இன்னைக்கு கலெக்டர் வந்து பார்த்தார். முதலில் ஒரு கோயிலில் நடத்தலாம்னு நெனச்சோம். ஆனால் அங்கு பாத்ரூம் வசதிகள் இல்ல. இப்போ அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியை பார்த்துட்டு அங்கே நடத்தலாம்னு கலெக்டர் சொல்லிருக்காரு.
இன்னும் உறுதியாகல. ஆயிரம் பேர் வரை அங்கு உட்காரலாம். உதயச்சந்திரன் சார் கலெக்டரா இருக்கும் போது தான் இந்த பிரச்சினை தீர்ந்தது. அவர் முதல்வர் கூட வர்றாரு. நல்ல விசயம் தான்,’’ என்றார்.
பாப்பாபட்டி அன்று பற்றி எரிந்ததிலும் அரசியல் இருந்தது. இன்று அது அணைந்தாலும், அரசியலுக்கு மீண்டும் பாப்பாபட்டியை தூசிதட்டியிருக்கிறது திமுக. பார்க்கலாம், அது உள்ளாட்சி அறுவடைக்கு உதவியுமா என்று!