புதுவையில் மீண்டும் அதிகாரப் புகைச்சல்.? ரங்கசாமி ஒரு பொம்மை.. சொல்கிறார் நாராயணசாமி!
முதல்வர் ரங்கசாமி ஒரு பொம்மையாக செயல்படுகிறார், ஆளுநர் தமிழிசைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி ஒரு பொம்மையாக செயல்படுகிறார், ஆளுநர் தமிழிசைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:
புதுவையில் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கிறது. முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் தமிழிசை அனைத்து அறிவிப்புகளையும் வெளியிடுகிறார். பிரதமர் புதுவைக்கு வருகிறார் என ஆளுநரே கூறுகிறார். பிரதமர் வருகை குறித்து முதல்வர் ரங்கசாமியோடு அவர் கலந்து பேசினாரா என தெரியவில்லை.
இளைஞர் விழா புதுவையில் நடத்த முடிவெடுக்கும் முன்பு ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். இமாச்சல பிரதேச மாநில அரசு விழாவை நடத்த அனுமதிக்கவில்லை. கொரோனா காலத்தில் இது போன்ற விழாக்களை நடத்த அனுமதிக்கக்கூடாது. எந்த சூழலில் பிரதமர் வருகிறார் என்பதும் தற்போதைய சூழலில் புதுவைக்கு இளைஞர் விழா தேவையா என்ற கேள்வி எழுகிறது.
8 ஆயிரம் இளைஞர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் என 20 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் வந்தால் கொரோனா எப்படி பரவாமல் இருக்கும். புதுவையை பிரதமர் மோடி புறக்கணித்துள்ளார். பெஸ்ட் புதுவையாக மாற்றுவோம் என கூறினார். ஆனால் ஒன்றையும் செய்யவில்லை.
காங்கிரஸ் ஆட்சியில் ரூ.200 கோடியில் கொண்டு வந்த திட்டங்களை இப்போது நிறைவேற்றி வருகின்றனர். அட்சயபாத்திரம் திட்டம் காங்கிரஸ் கொண்டு வந்தது. அதை இப்போது திறக்கின்றனர். புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம், ரூ.8 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்வோம் என பல வாக்குறுதிகளை கூறினர். ஆனால் எதையும் செய்யவில்லை.
முதல்வர் ரங்கசாமி ஒரு பொம்மையாக செயல்படுகிறார். ஆளுநர் தமிழிசைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். ஆளுநர் தமிழிசை முடிவுக்கு ரங்கசாமி கட்டுப்படுகிறார். ஆளுநர் தலைமையில் காபந்து அரசாக செயல்படுகிறது. இதுவே ரங்கசாமிக்கு மிகப்பெரும் இழுக்கு. ரங்கசாமியை பாஜகவினர் செயல்படவிடுவதில்லை. புதுவையில் அதிகார சண்டைதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )